குஜராத்தில் சோகம்: கனமழையால் வீடு இடிந்து மூதாட்டி உள்பட 3 பேர் உயிரிழப்பு


அகமதாபாத்: குஜராத் மாநிலம், துவாரகா மாவட்டத்தில் கனமழைக்கு வீடி இடிந்து மூதாட்டி, அவரது இரண்டு பேத்திகள் உயிரிழந்தனர்.

குஜராத் மாநிலம், துவாரகா மாவட்டம், ஜாம் கம்பாலியா நகரில் சௌராஷ்டிரா பிராந்தியத்தில் பெய்த கனமழையால் பாழடைந்த 3 மாடி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்தது. இதில் மூதாட்டி ஒருவரும், அவரது இரண்டு பேத்திகளும் உயிரிழந்ததாக போலீஸார் இன்று தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நேற்று மாலை நிகழ்ந்துள்ளது. இதனையடுத்து நள்ளிரவு வரை மீட்புப் பணிகள் தொடர்ந்தன. சுமார் 6 மணி நேரத்துக்குப் பின்னர், கட்டிட இடிபாடுகளிலிருந்து உயிரிழந்தவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டன. மேலும், படுகாயங்களுடன் மீட்கப்பட்ட 5 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

தேசிய பேரிடர் மீட்புப் படையினர், காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறை குழுவினர் இந்த மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். உயிரிழந்தவர்கள் கேசர்பன் கஞ்சாரியா (65), பிரிதிபென் கஞ்சாரியா (15) மற்றும் பாயல்பென் கஞ்சாரியா (18) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இன்று காலை 6 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் சூரத் மாவட்டத்தில் உள்ள உமர்பாதா தாலுகாவில் 276 மி.மீ. மழை பெய்துள்ளது. நவ்சாரி, ஜுனாகத், துவாரகா, கட்ச், டாங்ஸ் மற்றும் தபி மாவட்டங்களிலும் கனமழை பெய்து, தாழ்வான பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

x