ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்த அதிகாரிகள்: இளைஞர்கள் தீக்குளிக்க முயன்றதால் போலீஸார் அதிர்ச்சி


புழல்: திருவள்ளூர் அருகே ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் வந்ததை கண்டித்து, இளைஞர்கள் சிலர் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தீக்குளிப்பதாக மிரட்டல் விடுத்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

திருவள்ளூர் மாவட்டம் புழல் அருகே எம்.ஜி.ஆர் நகர் குடியிருப்பு பகுதி உள்ளது. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் 10 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகின்றனர். இந்த இடம் இரட்டை ஏரி என்றழைக்கப்படும் நீர்நிலைப் பகுதி என்பதால், அதனை அகலப்படுத்தி சுற்றுலாத்தலமாக மாற்ற பொதுப்பணித்துறை முடிவு செய்தது. இதையொட்டி, இங்கு வசித்து வரும் மக்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என பொதுமக்களுக்கு உத்தரவிடப்பட்டது. இதனை தொடர்ந்து மேம்பாட்டு பணிகளுக்கான இடம் கையகப்படுத்தும் பணி துவங்கியது.

இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுப்பணித்துறை அனுமதி ஆணையும் பெற்றுள்ளது. இந்த ஆணையின் அடிப்படையில் நிலங்களை கையகப்படுத்தும் பணிக்காக போலீஸார் உதவியுடன் அதிகாரிகள் அப்பகுதிக்கு இன்று வருகை தந்தனர். அப்போது, தங்களை வெளியேற்றக்கூடாது எனக்கூறி அப்பகுதியைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் போலீஸார் மற்றும் அதிகாரிகளுடன் அவர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனிடையே போராட்டத்தில் ஈடுபட்ட சில இளைஞர்கள் திடீரென தங்கள் கைகளில் இருந்த மண்ணெண்ணெயை உடலில் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்கப் போவதாக மிரட்டல் விடுத்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த போலீஸார் அவர்களை தடுத்து நிறுத்து, அவர்களிடம் இருந்த கேனை பிடுங்கினர். மேலும் அவர்கள் மீது தண்ணீரை ஊற்றி காப்பாற்றினர்.

இதையடுத்து அப்பகுதி மக்களிடம் போலீஸாரும், அதிகாரிகளும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருவதால், கூடுதல் போலீஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

x