சென்னையில் கஞ்சா விற்பனை செய்த 2 பேர் கைது: 14 கிலோ கஞ்சா பறிமுதல்!


சென்னை: ஆந்திராவிலிருந்து கஞ்சாவை சென்னைக்கு கடத்தி வந்து லாட்ஜில் தங்கி, விற்பனை செய்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து ரூ.1 லட்சம் மதிப்புள்ள 14 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

ஆந்திர பிரதேச மாநிலத்திலிருந்து ரயில் மூலம் சென்னைக்கு கஞ்சா கடத்தி வந்து அம்பத்தூர், தாம்பரம், மதுரவாயல், வடபழனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விற்பனை செய்யப்படுவதாக பரங்கிமலை மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் வடபழனி ரங்கப்பா நாயுடு சாலையில் உள்ள தனியார் லாட்ஜில் போலீஸார் சோதனையிட்டனர்.

இதில், அங்கு தங்கியிருந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த கார்த்திக், மதுரவாயல் பகுதியைச் சேர்ந்த கலைச்செல்வன் ஆகியோர் சிக்கினர். விசாரணையில் அவர்கள் மீது ஏற்கெனவே தாம்பரம், அம்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனை வழக்கு இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீஸார், அவர்களிடமிருந்து ரூ.1 லட்சம் மதிப்புள்ள 14 கிலோ கஞ்சா மற்றும் விற்பனைக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனம் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

x