மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டிடம் சுக்குநூறாக வெடிக்கும்: செல்போனில் மிரட்டல் விடுத்த போதை ஆசாமி கைது


மயிலாடுதுறை: மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என மிரட்டல் விடுத்த போதை ஆசாமியை கைது செய்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மூங்கில் தோட்டம் பகுதியில் செயல்பட்டு வருகிறது. 7 மாடிகள் கொண்ட இக்கட்டிடத்தில் மாவட்ட நிர்வாகத்தின் பல்வேறு பிரிவு அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான அரசு ஊழியர்கள் பணியாற்றி வரும் நிலையில், ஏராளமான பொதுமக்கள் பல்வேறு பணிகளுக்காக வந்து செல்கின்றனர். எப்போதும் பரபரப்புடன் காணப்படும் என்பதால் போலீஸார் தொடர் பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், இன்று மதியம், காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்ட நபர் ஒருவர், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் அது வெடிக்கும் எனவும் கூறிவிட்டு அழைப்பைத் துண்டித்துள்ளார். இதனால் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த போலீஸார் தீவிர சோதனை நடத்தினர். ஆனால் மர்ம பொருட்கள் எதுவும் கிடைக்காததால் அது வெறும் புரளி என்பது தெரியவந்தது. இதனால் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

இதனிடையே செல்போன் மூலம் அழைத்து மிரட்டல் விடுத்த நபர் குறித்து சைபர் க்ரைம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது, நலத்துக்குடி வடக்குத்தெருவைச் சேர்ந்த கணேசன் (44) என்பவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. இதையடுத்து அவரைக் கைது செய்த போலீஸார், பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில், கணேசன் குடிபோதைக்கு அடிமையானவர் என்பதும், குடிபோதையில் செல்போன் மூலம் அழைத்து மிரட்டல் விடுத்ததும் தெரியவந்தது.

x