பொள்ளாச்சி: மதுபோதையில் தகராறு செய்த வாலிபர், சாலையில் நடந்து சென்றவரை வெட்டிப்படுகொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த அம்பராம்பாளையம் சுங்கம் பகுதியைச் சேர்ந்தவர் பசுபதி (26). மது அருந்தும் பழக்கம் உள்ள பசுபதி, அடிக்கடி சுங்கம் பகுதியில் உள்ள கடைகளின் அருகே மதுபோதையில் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று இரவு மதுபோதையில் இருந்த பசுபதி, அங்குள்ள பேக்கரி ஒன்றில் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் பேக்கரியில் இருந்தவர்கள், அவரை தாக்கியுள்ளனர்.
இதனால் அங்கிருந்து வீட்டிற்குச் சென்ற பசுபதி, வீட்டிலிருந்த அரிவாளை எடுத்துக்கொண்டு மீண்டும் சுங்கம் பகுதிக்கு வந்துள்ளார். பின்னர் அரிவாளுடன் சாலையில் வருவோர் போவோரை மிரட்டியுள்ளார். அப்போது அவ்வழியாக பெயிண்டரான பொள்ளாச்சியைச் சேர்ந்த கிருஷ்ணன் (40) என்பவர் வந்துள்ளார். அவரை வழிமறித்து பசுபதி தகராறு செய்துள்ளார். அப்போது சரமாரியாக பசுபதி வெட்டியதில் படுகாயமடைந்த கிருஷ்ணன் ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடினார்.
உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் கிருஷ்ணன் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனிடையே தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், தப்பியோடிய பசுபதியை தீவிரமாக தேடிவந்தனர். இன்று மதியம், வீட்டின் அருகே பதுங்கியிருந்த பசுபதியை போலீஸார் சுற்றிவளைத்து கைது செய்தனர். அவரிடமிருந்து கொலைக்கு பயன்படுத்தப்பட்ட அரிவாளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.