பெண் வழக்கறிஞருக்கு சரமாரியாக கத்திக்குத்து: பெங்களூரு நீதிமன்றத்தில் பரபரப்பு


பெங்களூரு: மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் பெண் வழக்கறிஞரை ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம், பெங்களூரு மாஜிஸ்திரேட் நீதிமன்ற வளாகத்தில் சொத்துப் பிரச்சினை தொடர்பாக வழக்கறிஞர் விமலா என்பவர் இன்று ஆஜராக வந்திருந்தார். அப்போது அவரை ஒருவர் கத்தியால் சரமாரியாக குத்தினார், இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. நீதிமன்றத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார், கத்தியால் குத்தியவரை பிடித்ததுடன், கத்திக்குத்தில் காயமடைந்த வழக்கறிஞர் விமலாவை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

வழக்கறிஞர் விமலாவை கத்தியால் குத்தியவரை பிடித்து விசாரணை நடத்திய போது அவரது பெயர், ஜெயராம் ரெட்டி என்பது தெரிய வந்தது. வழக்கறிஞர் விமலாவுடன் ஜெயராமிற்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது நாளடைவில் இருவரையும் நெருக்கமாக்கியுள்ளது. இதனால் விமலாவிற்கு படிப்படியாக ஒன்றரை கோடி ரூபாய்க்கு மேல் ஜெயராம் ரெட்டி கொடுத்ததாக கூறப்படுகிறது. இதன் பின் அவர்கள் இருவருக்குள்ளும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து ஹெஜ்ஜாலா அருகே உள்ள சொத்து தொடர்பாக இருவருக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது.

இந்த நிலையில், வன்முறை மற்றும் சொத்து பிரச்சினை தொடர்பாக சேஷாத்திரிபுரம் காவல் நிலையத்தில் விமலா புகார் அளித்தார். இந்த வழக்குத் தொடர்பாக அவர்கள் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளனர். அப்போது தான் விமலாவை ஜெயராம் ரெட்டி, கத்தியால் குத்திக்கொலை செய்ய முயன்றது தெரிய வந்தது. செயின்ட் மார்த்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விமலாவின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது.

ஹலசுரு காவல் நிலைய போலீஸார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர். ஜெயராம் ரெட்டியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெண் வழக்கறிஞரை நீதிமன்ற வளாகத்தில் ஒருவர் குத்திக் கொலை செய்ய முயன்ற சம்பவம் பெங்களூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

x