இலங்கைக்கு கடத்துவதற்காக நாட்டுப்படகில் பதுக்கி வைத்திருந்த 6 லட்சம் வலி நிவாரண மாத்திரைகளை க்யூ பிரிவு போலீஸார் பறிமுதல் செய்தனர்.
இலங்கையில் இருந்து தமிழகத்திற்குள் தங்கம், தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு கஞ்சா, சமையல் மஞ்சள், கடல் அட்டை, பீடி இலை உள்ளிட்ட போதை பொருட்கள் சமீப காலமாக அதிக அளவு கடத்தப்பட்டு வருகிறது. இந்த சட்ட விரோத நடவடிக்கையை தடுக்க இந்திய கடற்படை, கடலோர காவல்படை மற்றும் இலங்கை கடற்படையினர் இந்திய-இலங்கை சர்வதேச கடல் எல்லையில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இருப்பினும் நவம்பர் இறுதி வாரம் முதல் டிசம்பர் முதல் 2 வாரம் ராமநாதபுரம் மாவட்டம் வேதாளை, மரைக்காயர் கடல் வழியாக இலங்கைக்கு கடத்த முயன்ற போதை பொருட்கள், கஞ்சா எண்ணெய், கிரிஸ்டல் மெத்தம்பெட்டமைன், வாசனை திரவியங்களுடன் கூடிய நக பாலீஷ், சமையல் மஞ்சள், மசாலா பொருட்கள், கடல் அட்டைகள் பிடிபட்டன.
கடந்த 2 வார ஓய்வுக்கு பின், கடல் அட்டை முயற்சி போலீஸாரால் நேற்று காலை தடுக்கப்பட்டது. இதை தொடர்ந்து வேதாளை கடற்பகுதியை போலீஸார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில், ராமநாதபுரம் க்யூ பிரிவு போலீஸாருக்கு கிடைத்த தகவல்படி, மண்டபம் அருகே வேதாளை சிங்கி வலை குச்சு பகுதியில் தீவிர சோதனை நடத்தினர். நாட்டுப்படகுகளை சோதனை செய்தபோது, தலா 10 வீதம் 60 ஆயிரம் அட்டைகளில் இருந்த 6 லட்சம் வலி நிவாரண மாத்திரைகள் இருப்பதை கண்டு பிடித்தனர். அவற்றை கைப்பற்றி போலீஸார், இலங்கை கடத்த முயன்ற மர்ம கும்பல் குறித்து விசாரித்து வருகின்றனர். இதே பெயர் (Pre Cub) ஆயிரம் மாத்திரைகளை இலங்கை யாழ்ப்பாணம் குற்றத்தடுப்பு போலீஸார் கைப்பற்றினர். இது தொடர்பாக யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை ஆறுகால்மடம், கொக்கு வில் பகுதிகளைச் சேர்ந்த 2 பேரை கைது செய்து யாழ்ப்பாணம் நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர்.