புத்தாண்டு நாளில் வேடசந்தூர் அருகே டாஸ்மாக் விற்பனையாளரை பீர் பாட்டிலால் இரவில் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த கும்பல் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே
பூத்தம்பட்டி டாஸ்மாக் கடை உள்ளது. இங்கு மல்வார் பட்டி பாலமுருகன் (45), விற்பனையாளராக பணியாற்றி வருகிறார். ஆங்கில புத்தாண்டு நாளான நேற்று மதியம் கடை திறந்த நேரத்தில் இருந்து விற்பனை படுமும்முரமாக இருந்தது. இந்நிலையில், மாரம்பாடி பிரவீன் உள்பட 3 பேர் நேற்றிரவு அங்கு சென்றனர். ஆளுக்கு ஒரு பீர் பாட்டில் வாங்கினர். சிறிது நேரம் கழித்து, கடைக்கு மீண்டும் வந்த அவர்கள், இந்த பீர் பாட்டிலை எடுத்துக்கொண்டு அதிக விலை பீர் வேண்டும் என கேட்டனர்.
அதற்கு விற்பனையாளர் பாலமுருகன் அந்த பீர் விலை அதிகம். அதற்குரிய ரூபாய் தந்தால் பீர் தருகிறேன் என கூறினார். பணம் தர முடியாது. பாட்டிலுக்கு பாட்டில் மாற்றிக்கொடுக்குமாறு பிரவீன் உள்பட 3 பேரும் சேர்ந்து பாலமுருகனுக்கு மிரட்டல் விடுத்தனர். பாலமுருகன் மறுத்தால் ஆத்திரமடைந்த பிரவீன், கடை முன் இருந்த மேஜையை தூக்கி எறிந்தார். கையில் வைத்திருந்த பீர் பாட்டிலை, கடை கதவில் அடித்து உடைத்து பாலமுருகனை தாக்கினார். அக்கிருந்து தப்பி ஓடிய பாலமுருகனை விரட்டி சென்று கடைக்குள் வைத்து தாக்கினார். பிரவீனுடன் வந்த இருவரும், கடையில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை அடித்து நொறுக்கினர். இதையடுத்து அங்கிருந்து மூன்று பேரும் தப்பினர்.
கடையில் வியாபாரத்தை நிறுத்திய
பாலமுருகன், இது குறித்து கடை மேற்பார்வையாளர், போலீஸாருக்கு தகவல் தெரிவித்தார். அங்கு வந்த வேடச்சந்தூர் போலீசார், பாலமுருகனிடம் விசாரித்தனர். டாஸ்மாக் கடையில் பதிவான கண்காணிப்பு கேமரா வீடியோ காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பாக போலீசில் பாலமுருகன் புகாரளித்தார். அதில், பிரவீன் உள்பட அடையாளம் தெரியாத 2 பேர் பணி செய்யவிடாமல் தடுத்து ரகளை செய்து, பீர் பாட்டிலை உடைத்து என்னைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர் என தெரிவித்துள்ளார். தனது பெரியப்பாவை கடந்த 6 மாதங்களுக்கு முன் கொலை செய்துவிட்டு சிறையில் இருந்து வெளியே வந்த பிரவின் கொலை மிரட்டல் விடுத்து சென்றதால், தனக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.