நெல்லை: நெல்லையில் வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜராக, ராக்கெட் ராஜாவின் வாகனத்தில் வந்த சிறப்பு எஸ்ஐ-யை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.
பனங்காட்டு படை கட்சியின் தலைவராக இருந்து வரும் ராக்கெட் ராஜாவின் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இது தொடர்பாக அவ்வப்போது அவர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி வருகிறார். இதன் ஒரு பகுதியாக வழக்கு ஒன்றில் ஆஜராவதற்காக கடந்த 19ம் தேதி ராக்கெட் ராஜா மற்றும் அவருடன் குற்றம் சாட்டப்பட்டிருந்தவர்கள் நெல்லை நீதிமன்றத்திற்கு கார் மூலம் வந்துள்ளனர்.
அப்போது அவர்களுடன் திசையன்விளை சிறப்பு எஸ்ஐ ராமமூர்த்தியும் அந்த காரில் பயணித்ததாக கூறப்படுகிறது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. பல்வேறு வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஒருவரின் வாகனத்தில் காவல்துறை அதிகாரி ஒருவர் பயணித்தது சட்டப்படி தவறு என பலரும் சுட்டிக்காட்டி இருந்தனர்.
இதுபோன்ற பணிக்காக நீதிமன்றத்திற்கு வரும் அதிகாரிகள் மற்றும் காவலர்கள், காவல் நிலைய வாகனத்தில் மட்டுமே நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டும் என்ற விதி அமலில் இருந்து வருகிறது. இந்த நிலையில் இது தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டது. இதையடுத்து திசையன்விளை சிறப்பு எஸ்ஐ ராமமூர்த்தியை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட எஸ்பி உத்தரவிட்டுள்ளார்.