பெண் காவலர் மீது நிதி மோசடி புகார்: புகாரளிக்க வந்தவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு


கோவை: காவல்துறையில் புதிதாக தொழில் தொடங்க உள்ளதாக கூறி ரூ.9 லட்சம் மோசடி செய்த பெண் காவலர் மற்றும் அவரது கணவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, புகாரளிக்க வந்த நபர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மனு நீதி நாள் முகாம் நடைபெற்றது. இதில் மனு அளிப்பதற்காக ஏராளமான பொதுமக்கள் வருகை தந்திருந்தனர். அதில், திருப்பூர் பகுதியைச் சேர்ந்த பார்த்திபன் என்பவரும் மனு அளிக்க வந்திருந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் “நானும், கோவை சேரன்மாநகரில் வசித்து வரும் லெனின் இருவரும் ஒரே நிறுவனத்தில் பணியாற்றினோம். லெனின் மனைவி அமிர்தவள்ளி. கோவை பீளமேடு காவல் நிலையத்தில் போக்குவரத்து காவலராக பணியாற்றி வருகிறார்.” என்றார்.

மேலும், “கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு லெனின் கோவை மற்றும் திருப்பூர் காவல்துறை ஆணையர் அலுவலகங்களில் கேண்டீன் தொழில் தொடங்க உள்ளதாகவும், காவலர்களின் இருப்பிடத்திற்கு சென்று உணவு டெலிவரி செய்யும் தொழில் செய்ய உள்ளதாகவும் கூறினார்.

இதனால் என்னிடமிருந்து இருவரும் ரூ.9 லட்சம் பணத்தை பெற்றுக் கொண்டனர். கொடுத்த பணத்தை பலமுறை கேட்டும் வழங்கவில்லை. கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்தேன். பெண் காவலரை அழைத்துப் பேசி, பணத்தை திரும்ப வழங்குமாறு அறிவுறுத்தினார்.” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “இருந்த போதும் தற்போது வரை பெண் காவலர் பணத்தை திரும்ப வழங்கவில்லை. உதவி ஆணையர் உள்ளிட்ட காவல் உயர் அதிகாரிகள், பெண் காவலருக்கு உதவி செய்வதால், என் புகார் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளேன்.” என்றார்.

அப்போது திடீரென அவர் தான் பையில் கொண்டு வந்திருந்த டீசலை உடலின் மீது ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். இதைக்கண்ட பாதுகாப்பிற்கு நின்றிருந்த காவலர்கள், அவரை உடனடியாக தடுத்து நிறுத்தி காப்பாற்றினர். தொடர்ந்து அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

x