இன்ஸ்டா ரீல்ஸ் எடுப்பதற்காக தற்கொலை நாடகம்: கயிறு இறுகி சிறுவன் பலியான பரிதாபம்


மொனேரா: இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் எடுப்பதற்காக கழுத்தில் கயிறு போட்டு தற்கொலை நாடகமாடிய சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சமூக ஊடங்களில் பெயர் வாங்குவதற்காக சிலர் ஆபத்தான முறையில் ரீல்ஸ் தயாரிப்பதற்கான நடவடிக்கையில் இறங்குகின்றனர். ஓடும் பேருந்தில் இருந்து குதிப்பது, ரயிலில் இருந்து வெளியே பாய்வது, உயரமான இடங்களில் இருந்து ஆற்றில் குதிப்பது போன்ற விபரீதமான செயல்களில் ஈடுபடுகின்றனர். இப்படி ஆபத்தான முறையில் ரீல்ஸ் தயாரித்து அதை சமூக ஊடகங்களில் வெளியிட ஆர்வமுள்ள பலர் எடுக்கும் முயற்சிகள் அவர்களின் உயிருக்கே ஆபத்தை விளைவித்து விடுகின்றன.

அப்படியொரு சம்பவம் தான், மத்தியப் பிரதேச மாநிலம் மொனேரா மாவட்டத்தில் நேற்று நடந்துள்ளது. 11 வயதான கரண் என்ற சிறுவன், தனது வீட்டின் அருகே தனது நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் தயாரிப்பதற்காக கயிற்றில் கழுத்தை நுழைத்து தற்கொலை செய்வது போல கரண் நடித்துள்ளார்.

ஆனால், அப்போது திடீரென கழுத்தில் கயிறு இறுகி அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதனால் உடனடியாக அவர் மயங்கி விழுந்தார். இதையறிந்த அவரது குடும்பத்தினர் கரணை அம்பாவில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே கரண் பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரீல்ஸ் எடுப்பதற்காக கயிற்றை கழுத்தில் மாட்டி தற்கொலை நாடகமாடிய சிறுவன், உண்மையிலேயே உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

x