காவிக்கொடியுடன் சென்ற பக்தர்களை மதம் மாற்ற முயற்சி: கர்நாடகாவில் பரபரப்பு


பெல்லாரி: காவிக்கொடி ஏந்தி புனித யாத்திரை சென்ற பக்தர்களை கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்ய முயற்சித்த இருவரை போலீஸார் கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம், பெல்லாரி மாவடடத்தில் சிறுகுப்பா தாலுகாவில் உள்ள தெக்கலகோட் நகரில் தேசிய நெடுஞ்சாலை வழியாக, இரண்டு பக்தர்கள் காவிக்கொடி ஏந்தி மந்த்ராலயா சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்களை தடுத்து மூளைச்சலவை செய்து மதம் மாற்ற இருவர் முயற்சி செய்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தெக்கலக்கோட்டை போலீஸில் காதிலிங்கப்பா என்பவர் புகார் கொடுத்தார். மேலும், இது தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி வீடியோக்களை வைத்து விசாரணை நடத்தினர்.

அப்போது தெக்கலகோட் நகரை சேர்ந்த உசேன் பாஷா (44), சாய்பாபா (24) ஆகியோர் மதம் மாற்ற முயன்றது தெரிய வந்தது. அவர்கள் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீஸார், அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

x