ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழந்ததால் விபரீதம்: நெசவுத் தொழிலாளி தற்கொலை @ மதுரை


சென்னை: ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்த வேதனையில் மதுரையில் நெசவு தொழிலாளி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

ஈரோடு மாவட்டம், சென்னிமலை எம்.பி.என். நகரைச் சேர்ந்தவர் நாகராஜன். இவரது மகன் குமரேசன். இவர் நெசவுத்தொழில் செய்து வந்தார். சொந்தமாக தறி அமைக்க விரும்பினார். இதற்காக ரூ.5 லட்சம் கடன் வாங்கினார். அந்தப் பணத்தை ஆன்லைன் ரம்மி விளையாட்டில் இழந்து நஷ்டம் அடைந்தார். இதன் காரணமாக குடும்பத்துடன் சில மாதத்திற்கு முன்பு மதுரை எஸ்.ஆலங்குளம் பாரதிபுரம் 8-வது தெருவில் குடியேறினார்.

இங்கிருந்து கொண்டு கோவைக்கு வேலைக்கு சென்றார். வேலை செய்த இடத்தில் அட்வான்ஸ் பணம் பெற்றுள்ளார். இந்த பணம் மூலம் ஏற்கெனவே இழந்த பணத்தை மீட்டுவிடலாம் என்ற எண்ணத்தில் மீண்டும் ஆன்லைனில் விளையாடி பணத்தை இழந்திருக்கிறார். பணத்தை இழந்த விரக்தியில் வேலைக்கு போகாமலும் வீட்டிலேயே இருந்துள்ளார். இதனால் கணவர் மனைவிக்குள் பிரச்சினை ஏற்பட்டடிருக்கிறது.

இந்நிலையில், வீட்டில் தனியாக இருந்தபோது, சனிக்கிழமை மின்விசிறி பொருத்தும் கம்பியில் சேலையால் தூக்கப்போட்டு தற்கொலை செய்திருப்பது தெரிந்து குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து அவரது மனைவி அருணா தேவி செல்லூர் போலீசில் கொடுத்த புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்தனர். இருப்பினும், தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரிக்கின்றனர்.

தற்கொலை தீர்வல்ல: தற்கொலை எந்தப் பிரச்சினையையும் தீர்க்காது. தற்கொலை எண்ணம் வந்தால் தற்கொலைத் தடுப்பு மையங்களைத் தொடர்புகொண்டு ஆலோசனை பெறலாம். வாழ்வதற்கு புது நம்பிக்கை பெற சினேகா தொண்டு நிறுவனத்தின் 044 - 24640060 ஹெல்ப்லைன் எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம். தமிழக அரசின் ஹெல்ப்லைன் நம்பர் 104-க்கும் தொடர்புகொண்டு பேசலாம்.

x