நூதன முறையில் மூதாட்டியை ஏமாற்றி 43 பவுன் தங்க நகைகள் கொள்ளை @ புதுச்சேரி


புதுச்சேரி: புதுச்சேரி அருகே பஞ்சாயத்து ஊழியர்கள் எனக் கூறி வீட்டினுள் நுழைந்த இரண்டு டிப்டாப் நபர்கள் வீட்டில் இருந்த மூதாட்டியை ஏமாற்றி 43 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்றனர். இது குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுச்சேரி வில்லியனூர் அருகே உறுவையாறு ராமச்சந்திராநகர் விரிவாக்கம் பகுதியில் வசித்து வருபவர் செந்தில் மனைவி விமலா. தனியார் கல்லூரியில் பணிபுரிந்து வருகின்றார். இவர் கணவர், இரண்டு குழந்தைகள் மற்றும் மாமியார் சந்திரா (68), கணவரின் சகோதரர் கந்தன் ஆகியோருடன் வசித்து வருகின்றார்.

இந்நிலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வீட்டில் முதியவரான சந்திரா மட்டும் இருந்துள்ளார். அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த 2 ஆண்கள் சந்திராவிடம் தாங்கள் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்தில் பணிபுரிவதாக போலி அடையாள அட்டை ஒன்றை காண்பித்து வீட்டில் தண்ணீர் குழாயை சோதனையிட வந்துள்ளோம் எனக் கூறியுள்ளனர்.

அதனை நம்பிய சந்திராவும் வீட்டின் கேட்டை திறந்து அவர்களை உள்ளே வர அனுமதித்துள்ளார். இதையடுத்து உள்ளே சென்ற அந்நியர்கள் வீட்டின் மேல்தளத்தில் இருந்த வாட்டர் டேங்கை சென்று பார்த்துள்ளனர். பின்னர் சிறிது நேரத்தில் அங்கிருந்து தங்களது இருசக்கர வாகனத்தில் புறப்பட்டு சென்றுவிட்டனர்.

அதன்பிறகு சந்திரா வீட்டில் இருந்த பீரோவை பார்த்தபோது அதில் வைத்திருந்த நகை பையை காணாமல் போயிருந்ததை அறிந்து பதறினார். அதில் ரூ.12 லட்சம் மதிப்புள்ள 43 பவுன் இருந்தது. இதையடுத்து சந்திரா, மருமகள் விமலாவுக்கு போன் செய்து நடந்ததை கூறியுள்ளார்.

உடனே விமலா வீட்டுக்கு வந்து மாமியாரிடம் விசாரித்தபோது தண்ணீர் குழாய் சோதனை செய்வது போல் வந்த இருவர் நகைகளை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இது குறித்து விமலா மங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

x