அகன்ற திரை அர்ஜென்டினா ஆட்டத்துக்கு 3 வயது மகனை பறிகொடுத்த அலட்சிய பெற்றோர்


உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தை அகன்ற திரையில் ரசிக்கும் ஆர்வத்தில், மும்பையை சேர்ந்த அலட்சிய பெற்றோர் தங்களது 3 வயது மகனை பறிகொடுத்துள்ளனர்.

தெற்கு மும்பையின் சர்ச்கேட் பகுதியில் கார்வாரி என்ற பெயரில் கிளப் ஒன்று செயல்படுகிறது. வசதி படைத்தவர்களுக்கான இந்த கிளப்பில் ஞாயிறு அன்று உலகக்கோப்பை கால்பந்து போட்டியை அகன்ற திரையில் ஒளிபரப்பும் ஏற்பாடுகளை செய்திருந்தனர். பல்லடுக்கு கட்டிடத்தின் 6வது தளமான மொட்டை மாடியில் இதற்கான ஏற்பாடுகள் விமரிசையாக செய்யப்பட்டிருந்தன. கிளப் உறுப்பினர்கள் பலரும் தங்கள் குடும்பம் சகிதமாக இந்த லைவ் நிகழ்ச்சிக்கு வந்திருந்தனர்.

அவர்களில் பெற்றோருடன் வந்திருந்த ஹ்ரிதியா ரத்தோட் என்ற 3 வயது பாலகனும் அடங்குவான். அர்ஜென்டினா - பிரான்ஸ் இடையிலான இறுதிப்போட்டி களைகட்டியிருந்தபோது, ரத்தோட் பாத்ரூம் செல்ல வேண்டுமென பெற்றோரை நச்சரித்திருக்கிறான். பரபரப்பான ஆட்டத்தின் சுவாரசியத்தை இழக்க விரும்பாத அந்த இளம் பெற்றோர் அருகிலிருந்த, 11 வயது சிறுவனை அழைத்து ரத்தோட்டுக்கு உதவுமாறு கேட்டிருக்கிறார்கள்.

அதன்படி 11 வயது சிறுவனின் வழிகாட்டுதலோடு, 3 வயது ரத்தோட் 5வது தளத்தில் இருக்கும் பாத்ரூமுக்கு சென்றிருக்கிறான். கீழிறங்கும் மாடிப்படிகளின் கைப்பிடியாக பொறுத்தப்பட்டிருந்த கண்ணாடி தடுப்புகளில் ஓரிடத்தில் ஒன்று உடைந்து இருந்ததை ரத்தோட் கவனித்தான். அந்த வயதுக்கே உரிய ஆர்வக்கோளாறுடன் அங்கிருந்து கீழே எட்டிப்பார்த்தவன், தலைக்குப்புற தரைத்தளத்துக்கு பாய்ந்து விழுந்தான்.

ரத்தோட் கீழே விழுந்துவிட்டதாக அவனது பெற்றோரிடம் 11 வயது சிறுவன் ஓடோடி சென்று தெரிவித்திருக்கிறான். அவர்களோ விளையாடும்போது விழுந்து எழுவதை சொல்வதாக கருதி, அகன்ற திரை கால்பந்து ஆட்டத்திலேயே கருத்தாக இருந்திருக்கின்றனர். ஆட்டம் முடிந்த பிறகே ரத்தோட்டை தேடியிருக்கிறார்கள். 11 வயது சிறுவன் அந்த அலட்சிய பெற்றோரை அழைத்துச் சென்று மாடிப்படியை காட்டிய பிறகே அவர்களுக்கு விபரீதம் உறைத்திருக்கிறத்து.

ரத்த வெள்ளத்தில் தரையில் விழுந்த மீனாக துடித்துக்கொண்டிருந்த ரத்தோட்டை அள்ளிக்கொண்டு மருத்துவமனை சென்றனர். ஆனால் அங்கே மருத்துவர்கள் கைவிரித்து விட்டனர். சிறுவன் உயிரிழந்ததுக்கு கிளப் நிர்வாகத்தின் மீது பெற்றோரும், பெற்றோர் மீது கிளப் நிர்வாகமும் பரஸ்பரம் குற்றம்சாட்டி வருகிறார்கள். விபத்தில் சிறுவன் இறந்ததாக காவல்துறை வழக்கு பதிந்து விசாரித்து வருகிறது.

அலட்சியங்களுக்கு எப்போதும் விலை அதிகம் கொடுக்க வேண்டியதாகிறது.

x