முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கார் மீது தாக்குதல்: ஆசிட் வீச்சு; வேட்பாளர் கடத்தல் என புகார்


கரூர் அருகே அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் வாகனம் மீது இன்று தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. கார் கண்ணாடி உடைப்பு, ஆசிட் வீச்சு, வேட்பாளர் கடத்தல் உள்ளிட்ட களேபரங்களும் உடன் அரங்கேறி இருப்பதாக தெரிய வந்திருக்கின்றன.

கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் எம்.ஆர்.விஜயபாஸ்கர். இவர் தனது ஆதரவாளர்கள் சிலருடன் திண்டுக்கல்லில் இருந்து கரூர் நோக்கி காரில் வந்துகொண்டிருந்தார். அப்போது வேடச்சந்தூர் அருகே நாகம்பட்டி பாலம் பகுதியில் 4 கார்களில் வந்த மர்ம நபர்கள், விஜயபாஸ்கர் காரை மறித்து தாக்குதல் நடத்த தொடங்கினர்.

முன்னாள் அமைச்சர் காரின் முன் மற்றும் பின்புறக் கண்ணாடிகளை உடைத்ததோடு, காரில் உள்ள நபர்கள் மீது ஆசிட் வீச்சு நடத்தவும் செய்தனர். இதில் காரில் உள்ள 2 நபர்களுக்கு காயம் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. மேலும் விஜயபாஸ்கர் உடன் வந்த ஒருவரை, மர்ம நபர்கள் கடத்திச் சென்றுள்ளனர். விஜயபாஸ்கர் கார் மீதான தாக்குதலும் இந்த கடத்தலுக்காவே நடந்திருப்பதாக தெரிய வருகிறது.

கரூர் ஊராட்சி மன்ற துணைத்தலைவருக்கான தேர்தல், கரூர் ஊராட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற இருந்தது. மொத்தமுள்ள 12 மாவட்ட கவுன்சிலர்களில் திமுக மற்றும் அதிமுகவினருக்கு தலா 6 என்ற எண்ணிக்கையில் உள்ளனர். அதிமுக சார்பில் போட்டியிடும் திருவிக என்பவர், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் உடன் திண்டுக்கல்லில் இருந்து கரூருக்கு வந்துள்ளார். இவரை குறிவைத்தே விஜயபாஸ்கர் கார் மீதான தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.

தகவலறிந்த கரூர் மாவட்ட போலீஸார் உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்து விசாரணையில் ஈடுபட்டனர். திண்டுக்கல் - கரூர் சாலையின் சிசிடிவி பதிவுகள் மூலம் தாக்குதல் நடத்திவிட்டு தப்பி சென்றோர் குறித்து விசாரித்து வருகின்றனர். தமிழகத்தில் முன்னாள் அமைச்சர் ஒருவரின் கார் மீது தாக்குதல் நடந்ததோடு, ஆசிட் வீச்சு, வேட்பாளர் கடத்தல் போன்றவை நிகழ்த்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

x