டெல்லியில் நடந்த ஷ்ரத்தா சம்பவம் போல, ராஜஸ்தானிலும் ஒரு படுகொலை அரங்கேறியிருக்கிறது. அத்தையை கொன்று 10 துண்டுகளாக்கிய இளைஞர், அவற்றை வனப்பகுதியில் எறிந்துவிட்டு அத்தையைக் காணோம் என நாடகமாடி இருக்கிறார்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை சேர்ந்தவர் அனுஜ் சர்மா. இவர் தனது அத்தையை சுத்தியலால் அடித்து கொன்றதோடு, மார்பிள் அறுக்கும் கருவியால் சடலத்தை 10 துண்டுகளாக்கி இருக்கிறார். பின்னர் அவற்றை சூட்கேஸ் மற்றும் பையில் அடக்கிவைத்து, டெல்லி சாலையை ஒட்டிய வனப்பகுதிக்குள் வெவ்வேறு மூலைகளில் எறிந்திருக்கிறார்.
டிசம்பர் 11 அன்று இந்த சம்பவத்தை நிகழ்த்திய அனுஜ், ஒன்றும் அறியாதவர் போல ’அத்தையைக் காணவில்லை’ என காவல் நிலையத்திலும் புகாரளித்து திரும்பியிருக்கிறார். அப்போதுதான் பிடெக் படிப்பை முடித்து, ’ஹரே ராமா ஹரே கிருஷ்ணா’ ஆன்மிக இயக்கத்தில் பங்கெடுத்திருக்கும் அனுஜ் மீது போலீஸாருக்கு ஆரம்பத்தில் ஐயம் எழவில்லை.
அனுஜ் சமையலறையில் ரத்தக்கறை இருந்தது தொடர்பாக போலீஸார் அனுஜை நெருக்கியபோது, அவர் உண்மையை கக்கினார். கணவரை இழந்த சரோஜ் சர்மா, சிறு வயது முதலே அனுஜ் படிப்புக்கும் உதவி வந்திருக்கிறார். அந்த உரிமையில் கல்லூரி முடித்த அனுஜின் நடவடிக்கைகளில் கடும் கட்டுப்பாடுகளையும் விதித்திருக்கிறார். சம்பவத்தன்று டெல்லி செல்ல விரும்பிய அனுஜை, 64 வயதாகும் அத்தை சரோஜ் தடுத்திருக்கிறார். ஆத்திரமுற்ற அனுஜ் சுத்தியலால் தாக்கியதில் சரோஜ் சம்பவ இடத்திலேயே இறந்திருக்கிறார்.
பின்னர் கடைக்கு சென்று மார்பிள் அறுக்கும் கருவியை வாங்கி வந்த அனுஜ், நிதானமாக கழிவறையில் வைத்து அத்தை சடலத்தை துண்டமாடி இருக்கிறார். அப்படி 10 துண்டுகளை வனப்பகுதியில் எறிந்திருக்கிறார். அனுஜை கைது செய்திருக்கும் ஜெய்ப்பூர் போலீஸார் சரோஜ் சடலத்தின் மீதமுள்ள துண்டங்களை வனத்தில் தேடி வருகின்றனர்.
டெல்லியில் தன்னுடன் சேர்ந்து வாழ்ந்த காதலி ஷ்ரத்தாவை கொன்ற காதலன் அப்தாப், சடலத்தை துண்டமிட்டு வனப்பகுதியில் எறிந்த வழக்கு நாட்டையே உலுக்கியது. அதே பாணியில், அதன் பாதிப்பில் நிகழ்ந்திருக்கும் ஜெய்ப்பூர் கொலை வழக்கும் பொதுவெளியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.