மாடியிலிருந்து 5-ம் வகுப்பு மாணவியை தூக்கி எறிந்த ஆசிரியை: பள்ளியில் அதிர்ச்சி சம்பவம்


டெல்லியில் 5 வகுப்பு மாணவியை வகுப்பறையின் முதல் மாடி ஜன்னலிலிருந்து பள்ளி ஆசிரியை ஒருவர் தூக்கி எறிந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

கீதா தேஷ்வால் என்ற ஆசிரியை, சிறுமியை கத்தரிக்கோலால் தாக்கி, முதல் மாடியில் உள்ள வகுப்பறையில் இருந்து தூக்கி வீசியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து ஆசிரியை கைது செய்யப்பட்டு, அவர்மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பேசிய போலீஸ் துணை கமிஷனர் ஸ்வேதா சவுகான், "தேஷ் பந்து குப்தா சாலையின் பீட் அதிகாரிக்கு காலை 11.15 மணியளவில் அப்பகுதியில் உள்ள பள்ளியில் முதல் மாடி வகுப்பறையில் இருந்து ஒரு சிறுமி தூக்கி வீசப்பட்டதாக தகவல் கிடைத்தது, மேலும் அங்கு ஏராளமான மக்கள் கூடினர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் சிறுமியை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும், சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். அப்பகுதி ஸ்டேஷன் ஹவுஸ் அதிகாரி (SHO) மற்றும் பிற அதிகாரிகளும் பள்ளிக்கு வந்து நிலைமையைக் கட்டுப்படுத்தியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறோம்" என்று கூறினார்.

x