காதலிக்கு 49 கத்திக்குத்து..!


காதலியை 49 முறை கத்தியால் குத்திக் கொன்ற காதலன் கைது செய்யப்பட்டிருக்கிறான். காதலி அடிக்கடி திருமணத்துக்கு வறுபுறுத்தியதால் ஆத்திரமடைந்ததாக காதலன் வாக்குமூலம் தந்திருக்கிறான்.

ஒடிசா மா நிலம் புவனேஸ்வரை சேர்ந்தவர்கள் ஜெகனாத் கோடா மற்றும் சீமாதாஸ். இளம்சோடியான இருவரும் காதல் வயப்பட்டு பல இடங்களில் ஒன்றாக சுற்றித் திரிந்திருக்கிறார்கள். இதற்கிடையே காதலன் ஜெகனாத் மீது சீமாதாஸ்க்கு ஒரு சந்தேகம் முளைத்திருக்கிறது. ’நிஜமாலுமே இவன் காதலிக்கிறானா; கல்யாணத்து உடன்படுவானா..’ என்றெல்லாம் சீமாதாஸ் ஐயமுறுகிறாள். அதற்கேற்றபடி ஜெகனாத்தின் தேவைகள், ஒன்றாக ஊர் சுற்றுவதிலும் இதர வழிகளிலுமே நீடிக்கின்றன.

அதனை தெளிவுபடுத்தும் வகையில் ஜெகனாத்தை ’திருமணம் செய்து கொள்ளலாமா’ என சீமாதாஸ் கேட்கிறாள். அவன் மழுப்பவே உஷாராகி, காதலனை திருமணத்துக்கு வற்புறுத்த ஆரம்பிக்கிறாள் காதலி. தனது எதிர்பார்ப்புகளுக்கு மாறாக சீமாதாஸ் நச்சரிப்பதாக ஜெகனாத் எரிச்சலடைய ஆரம்பிக்கிறான். திருமணத்துக்கு மறுத்தால் தன்னை சீமாதாஸ் சும்மா விடமாட்டாள் எனவும் அறிகிறான். எனவே ஒரு திட்டம் தீட்டுக்கிறான்.

அதன்படி ’வா.. வழக்கம்போல ஊர் சுற்றலாம்..’ என காதலியின் கைகளை பற்றிக்கொண்டு, குஜராத் மாநிலம் சூரத்துக்கு பயணப்படுகிறான். அவனது தேவையறிந்த சீமாதாஸ், காதலனை தவிர்க்க முயல்கிறாள். ஆனபோதும் அவளை வற்புறுத்தி ஜெகனாத் அழைத்துச் செல்கிறான். அங்கேயும் திருமணப் பேச்சை சீமாதாஸ் எடுக்க, ஜெகனாத் சினம் கொள்கிறான்.

சில நாள் கழித்து சூரத்தின் வனப்பகுதியில் உடலெங்கும் கத்திக்குத்து காயங்களுடன் கண்டெடுக்கப்பட்ட இளம்பெண்ணின் சடலம் குஜராத் போலீஸாரை அதிர வைக்கிறது. காரணம், அப்பெண்ணின் உடலில் மொத்தம் 49 கத்துக்குத்துகள் விழுந்திருக்கின்றன.

தனிப்படைகள் அமைக்கப்படுகின்றன. சம்பவ இடத்தின் தடயங்கள், போக்குவரத்து, சிசிடிவி பதிவுகள் என சகலமும் அலசி ஆராய்கிறார்கள். பெண் அணிந்திருந்த உடையின் தையல் முத்திரை மற்றும் பேருந்து நிலைய சிசிடிவி பதிவு ஆகியவற்றை வைத்து, கொல்லப்பட்டது சீமாதாஸ் என அடையாளம் காண்கிறார்கள். பின்னர் புவனேஸ்வர் சென்று ஜெகனாத்தை அள்ளிவந்து முறைப்படி விசாரித்ததில் அவன் குற்றத்தை ஒப்புக்கொண்டான்.

சதா திருமணத்துக்கு நச்சரித்ததால் காதலி மீது வெறுப்பாகி கொன்றதாக வாக்குமூலம் தந்திருக்கிறான். பழகிய பெண்ணை 49 முறை கத்தியால் குத்தும் அளவுக்கு கொடூரனான ஜெகனாத்தை, சீமாதாஸ் நம்பியது எப்படி என்பதுதான் போலீஸாருக்கு புரியவில்லை.

இதே போன்று, திருமணத்துக்கு வற்புறுத்திய காரணத்துக்காக, டெல்லியில் ஷ்ரத்தா என்ற பெண்ணை காதலன் அப்தாப் பூனாவாலா கொன்றதோடு, சடலத்தை துண்டமிட்டு தினம் ஒன்றாக தொலைத்ததும் அண்மையில் நடந்தேறி இருப்பது குறிப்பிடத்தக்கது.

x