கத்திமுனையில் அட்டகாசம்: சலூன்கடைகளை குறிவைக்கும் நூதன கொள்ளையர்


சென்னையில் கத்திமுனையில் சலூன் கடைகளை குறிவைத்து வேட்டையாடும் நூதன கொள்ளையரை, நீண்ட தேடலுக்குப் பின்னர் போலீஸார் நெருங்கி உள்ளனர். மாநகரில் அண்மைக்காலமாக சலூன் மற்றும் மசாஜ் மையங்களை குறிவைக்கும் கொள்ளையர்களால் பொதுமக்கள் மத்தியில் அச்சமும் எழுந்துள்ளது.

சென்னை நொளம்பூர் எஸ்.பி நகர் பகுதியில் ’யுனிசெக்ஸ் சலூன்’ என்ற தனியார் கடை செயல்பட்டு வருகிறது. இங்கு கடந்த 8-ஆம் தேதி முகமூடி அணிந்த 6 பேர் கொண்ட கும்பல் நுழைந்தது. பட்டாக்கத்தியைக் காட்டியும் பெண் ஊழியர்களை மிரட்டியும் ரூ.2.5 லட்சம் ரொக்கம், 8 விலையுயர்ந்த செல்போன்கள், பெண் ஊழியர்கள் அணிந்திருந்த 3 சவரன் நகை, கல்லாவிலிருந்த ரூ.7500 ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையர் பறித்துச் சென்றனர்.

கொள்ளை சம்பவம் தொடர்பாக கடையின் உரிமையாளர் அளித்த புகாரின் பேரில் நொலம்பூர் போலீஸார் விசாரணை நடத்தி அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். வாடிக்கையாளர் போல 2 நபர்கள் உள்ளே நுழைந்தவுடன், சற்று நேர இடைவெளியில் இருசக்கர வாகனத்தில் வரும் 4 நபர்கள் கொள்ளையில் ஈடுபடுவது பதிவாகி இருந்தது.

இதனையடுத்து போலீஸார் தனிப்படை அமைத்து குற்றச்சம்பவ இடத்தின் 100-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். இதன் மூலம் மாதவரம் வரை கொள்ளையர் தடத்தை பின்தொடர்ந்த போலீஸார், அதன் பிறகான சிசிடிவி காட்சிகள் முறையாக பதிவாகாததால் ஏமாற்றமடைந்தனர்.

இந்த நிலையில் கடந்த 10ஆம் தேதி, திருடிச்சென்ற 2 செல்போன்களை கொள்ளையர்கள் ஆன் செய்ததில் சைபர் போலீஸார் கண்காணிப்பில் அவை சிக்கின. அதன் மூலம் கண்ணகி நகருக்கு போலீஸார் விரைந்தபோது, மீண்டும் அந்த செல்போன் ஸ்விட்ச் ஆப் ஆனதில் ஏமாற்றமடைந்தனர். நேற்று மீண்டும் செல்போன் ஆன் நிலவரம் அறிந்ததும், செல்போன் டவர் சமிக்ஞையை பின்தொடர்ந்த போலீஸார் கேளம்பாக்கம் பகுதியில் வைத்து சிட்லபாக்கத்தை சேர்ந்த ஆகாஷ்(19) என்பவரை கைது செய்தனர்.

ஆகாஷிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் கிடைத்தன. பெண்கள் அதிகமாக பணியாற்றும் சலூன் மற்றும் மசாஜ் சென்டர்களை கொள்ளையர்கள் குறிவைத்ததும், இதற்காக ஆன்லைனில் சலித்து சலூன் கடைகளை அவர்கள் அடையாளம் கண்டது தெரிய வந்திருக்கிறது. இந்த வகையில் முடிச்சூர், சோழிங்க நல்லூர் ஆகிய பகுதிகளின் சலூன் பார்லர்களில் கொள்ளையடித்ததும், போலீஸார் விசாரணையில் சிசிடிவி காட்சிகளில் இருந்து தப்பிக்க இருசக்கர வாகனங்களை வெவ்வேறு இடங்களில் நிறுத்தி விட்டு தப்பிச் சென்றது தெரியவந்தது. ஆகாஷை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ள போலீஸார், தலைமறைவாக உள்ள கலை, ரஞ்சித் உட்பட 5 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

x