காதல் ஜோதிடர் என மோசடி: இளம் பெண்ணிடம் ரூ.47 லட்சம் சுருட்டிய ஆசாமி கைது!


ஆன்லைன் ஜோதிடர் போல நடித்து, பரிகாரம் செய்வதாகக் கூறி ஹைதராபாத்தை சேர்ந்த இளம் பெண்ணிடம் ரூ.47.11 லட்சம் மோசடி செய்த பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த நபரை போலீஸார் கைது செய்தனர்.

சமூக வலைத்தளத்தில் காதல் ஜோதிடர் போல நடித்து ஹைதராபாத் பெண்ணிடம் ரூ.47.11 லட்சம் மோசடி செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட அந்த பெண், நவம்பர் 19, 2022 அன்று, ஹைதராபாத் போலீஸில் புகார் அளித்தார். அதில், “மூன்று மாதங்களுக்கு முன்பு, இன்ஸ்டாகிராமில் ஜோதிடரைத் தேடிக்கொண்டிருந்தபோது, ​​கோபால் சாஸ்திரி என்ற ஜோதிடரின் சுயவிவரம் “ஆஸ்ட்ரோ-கோபால்” என்ற பெயரில் இன்ஸ்டாகிராமில் கிடைத்தது. சமூக ஊடக பக்கத்தில் அவரது தொலைபேசி எண்ணும் இருந்தது. அவரைத் தொடர்புகொண்டு, எனது காதல் தொடர்பாக ஆரூட கணிப்புகளைப் பெற்றேன். அதற்காக அந்த நபர் ஆரம்பத்தில் ரூ 32,000 வசூலித்தார். மேலும், ஜோதிடம் மூலம் எனது பிரச்சினைகளை தீர்ப்பதற்காக பூஜை செய்வதாக கூறி, மொத்தம் ரூ.47.11 லட்சம் என்னிடம் மோசடி செய்துள்ளார்” என தெரிவித்துள்ளார்.

பெண் அளித்த புகாரைத் தொடர்ந்து பஞ்சாபின் மொஹாலியைச் சேர்ந்த லலித் என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது ஐடி சட்டத்தின் 66 சி & டி மற்றும் இந்திய தண்டனைச் சட்டம் 419, 420 ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

குற்றம் சாட்டப்பட்டவரிடமிருந்து இரண்டு உயர் ரக மொபைல் போன்கள், இரண்டு டெபிட் கார்டுகள் மற்றும் ஒரு காசோலை புத்தகத்தை அதிகாரிகள் கைப்பற்றினர்.

x