மின்வாரியத்தில் வேலை வாங்கி தருவதாக 7 லட்சம் வசூல்: கடைசியில் கிடைத்த வேலை என்ன தெரியுமா?


மின்வாரியத்தில் வேலைவாங்கித் தருவதாக ஏழரை லட்சத்தை வசூல் செய்துவிட்டு தற்காலிக அடிப்படையில் குப்பை அள்ளும் பணியை வாங்கிக்கொடுத்த திமுக நிர்வாகி கைது செய்யப்பட்டார்.

விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் சிவா. இவர் வேளச்சேரி காவல்நிலையத்தில் புகார் ஒன்றைக் கொடுத்தார். அதில், “வேளச்சேரி பகுதியைச் சேர்ந்தவர் சதீஸ். இவர் அப்பகுதியில் திமுக பிரமுகராக உள்ளார். இவர் என் மனைவிக்கு வேலை வாங்கித் தருவதாகச் சொல்லி ஒரு லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் என்னிடம் இருந்து வாங்கினார். ஆனால் என் மனைவிக்கு வேலை வாங்கித்தரவில்லை. இந்நிலையில் அதற்கு வாய்ப்பு இல்லாமல் போனதாகச் சொன்னவர், எனக்கு மின்வாரியத்தில் வேலை வாங்கித் தருவதாகச் சொன்னார். அதற்காக என்னிடம் இருந்து 7 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் பெற்றுக்கொண்டார்.

சென்னை வேளச்சேரி தண்டீஸ்வரம் கோயில் அருகே ஒரு கட்டிடத்தைக் காட்டி நான் இங்குதான் வேலை செய்ய போகிறேன் என்றெல்லாம் சொன்னார். ஆனால் கடைசியில் தற்காலிகமாக குப்பை அள்ளும் வேலை வாங்கிக்கொடுத்து ஏமாற்றிவிட்டார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.”எனக் கூறியிருந்தார். அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட வேளச்சேரி போலீஸார், சதீஸை கைது செய்தனர்.

x