சென்னை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த இரும்பு வியாபாரியை அவரது நண்பர்களே அழைத்துச் சென்று கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை புளியந்தோப்பு ஏ.எம்.கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் முனுசாமி(37) இவர் இரும்புக்கடை வைத்து நடத்திவருகிறார். பெரியமேடு மூர்மார்க்கெட் பகுதியில் உள்ள காம்பிளக்ஸ் ஒன்றுக்கு இவரை இவரது நண்பர்கள் நேற்று இரவு வீடுதேடி வந்து அழைத்துச் சென்றனர். அங்கு இரண்டாவது மாடிக்கு அழைத்துச் சென்று அவரது நண்பர்களே முனுசாமியை சரமாரியாக வெட்டிக் கொன்றனர். இந்தக் கொலை சம்பவம் குறித்துக் கேள்விப்பட்டதும் பெரியமேடு போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்துவந்து பெரியசாமி சடலத்தைக் கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இதனிடையே நேற்று நள்ளிரவு திருவள்ளூர் நகர் காவல் நிலைய ஆளுகைக்குட்பட்ட பகுதியில் போலீஸார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோ ஒன்றை வழக்கமான வாகன தணிக்கைக்காகத் தடுத்து நிறுத்தினர். அப்போது அதில் இருந்த இருவர் தப்பியோடினர். ஆட்டோவில் இருந்த நான்கு பேர் பிடிபட்டனர். போலீஸார் நடத்திய விசாரணையில் அவர்கள் கொடுங்கையூரைச் சேர்ந்த அஷ்ரப் அலி, எம்.ஆர்.நகர் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன், புளியந்தோப்பைச் சேர்ந்த அப்பாஸ், அபி ஆகியோர் என தெரியவந்தது. இரும்பு வியாபாரி முனுசாமியை இவர்கள் கொலை செய்துவிட்டு தப்பிச் செல்வதும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து போலீஸார் அவர்களைக் கைது செய்தனர்.
போலீஸார் தொடர்ந்து நடத்திய விசாரணையில், நண்பர்களுக்குள் செல்போன் விற்பனை தொடர்பாக முன்விரோதம் இருந்ததும், அதனால் முனுசாமியை அழைத்துப்போய் கொலை செய்ததும் தெரியவந்தது. நெருங்கிய நண்பரையே கொலை செய்த இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.