அரசு முத்திரையுடன் நூற்றுக்கணக்கான போலி சான்றிதழ்கள்: போலீஸிடம் சிக்கிய இருவர்


சென்னை அம்பத்தூரில் அரசு முத்திரையுடன் போலி சான்றிதழ் தயாரித்து முறைகேட்டில் ஈடுபட்டு வந்த இருவரை போலீஸார் கைது செய்தனர். இவர்கள் போலி அரசு முத்திரையுடன் பலதரப்பட்ட சான்றிதழ்களையும் நீண்டகாலமாக வழங்கி வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அம்பத்தூர் பகுதியில் பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள், பட்டா, கல்விச் சான்றிதழ், சிட்டா, சாதி சான்றிதழ், முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை சிலர் போலியாக அரசு முத்திரையுடன் விநியோகிப்பதாகவும், இதற்காக குறைந்தபட்சம் 5 ஆயிரம் முதல் அதிகபட்சம் 50 ஆயிரம் ரூபாய் வரை வசூலிப்பதாகவும் அம்பத்தூர் தாசில்தார் ராஜசேகருக்குத் தகவல் வந்தது. அவர் இதுகுறித்து போலீஸாருக்குத் தகவல் கொடுத்தார்.

இதனைத் தொடர்ந்து அம்பத்தூர் பகுதியில் உள்ள வீட்டுக்குள் புகுந்து போலீஸார் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அந்த வீட்டில் ஏராளமான போலி ஆவணங்களும், அரசின் போலி முத்திரைகளும் இருந்தன. போலீஸார் நடத்திய விசாரணையில் வீட்டுக்குள் போலியாக சான்றிதழ்களை தயாரித்தவர்கள் ஒரகடம் வெங்கடேஷ்வரா நகரைச் சேர்ந்த வின்சென்ட், சோழம்பேட்டையைச் சேர்ந்த பினு என்பது தெரியவந்தது. அம்பத்தூர் போலீஸார் இருவரையும் கைது செய்தனர். ஏற்கனவே கடந்த 2016-ம் ஆண்டு போலி ஆவணங்கள் தயாரித்து வின்சென்ட் கைது செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

x