தூத்துக்குடி ஆலையில் சிலிண்டர் வெடித்து விபத்து: 25 பேருக்கு மூச்சுத்திணறல்


தூத்துக்குடியில் தனியார் ஆலை ஒன்றில் நேற்றிரவு அமோனியா வாயு இருந்த சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இதில் ஆலையில் வேலை செய்த 25 ஊழியர்களுக்கு மூச்சுத்திணறல், மயக்கம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம், புதூர் பாண்டியாபுரத்தில் நிலா கடல் உணவுகள் என்ற தனியார் மீன் பதப்படுத்தும் ஆலை செயல்பட்டு வருகிறது. இதில் மீன்களைப் பதப்படுத்தும் வேலை நடைபெறுகிறது. இங்கிருந்து வெளிநாடுகளுக்கு மீன்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்த ஆலையில் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களைச் சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் குறிப்பாக பெண் தொழிலாளர்கள் அதிகம் வேலை செய்கின்றனர்.

இந்த ஆலையில் நேற்று இரவு 11 மணியளவில் சிலிண்டர் வெடித்து அமோனியா வாயு கசிந்ததாக கூறப்படுகிறது. இதனால் அங்கு வேலை செய்து கொண்டிருந்த 25 ஊழியர்களுக்கு மூச்சுத்திணறல், மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து கியாஸ் சிலிண்டர் வெடித்து அமோனியா வாயு கசிந்ததால் ஊழியர்களுக்கு மயக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த விபத்து குறித்து போலீஸார் விசாரணை நடததி வருகின்றனர். இதே ஆலையில்,கடந்த 2014-ம் ஆண்டு ஜூன் மாதம் அமோனியா வாயு கசிவு ஏற்பட்டு 50 பேர் பாதிக்கப்பட்டது என்பது போலீஸாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. தனியார் ஆலையில் அமோனியா வாயு கசிந்து 25 பேர் பாதிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

x