ரூ.5.34 லட்சம் லஞ்சம் - இளநிலை பொறியாளர் உட்பட 7 பேர் கைது!


கன்னியாகுமரி: லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் கன்னியாகுமரியில் உண்ணாமலைக்கடை பேரூராட்சி பொறியாளர் அலுவலகத்தில் நடத்திய அதிரடி ஆய்வின் போது 5 லட்சத்து 34 ஆயிரம் ரூபாய் லஞ்சப்பணம் பறிமுதல் செய்யப்பட்டதுடன் 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

கன்னியாகுமரி மாவட்டம் உண்ணாமலைக்கடை பேரூராட்சி பொறியாளர் அலுவலகத்தில் இளநிலை பொறியாளராக சாம் செல்வராஜ் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் கிள்ளியூர், உண்ணாமலைக்கடை, நல்லூர் உள்ளிட்ட பேரூராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் செய்யப்பட்டு வரும் பணிகளுக்கு ஒப்பந்ததாரர்களுக்கு பில் எழுதும் பணியில் ஈடுபட்டு வருகிறார். இதற்காக இவர் லஞ்சம் வாங்குவதாக மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து இன்று லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் ஒருவர் மாறுவேடத்தில் அலுவலகத்திற்கு சென்றுள்ளார். அப்போது சாம் செல்வராஜ் ஒப்பந்ததாரர் ஒருவரிடம் இருந்து லஞ்சப் பணத்தை வாங்குவதை அவர் கையும் களவுமாக பிடித்துள்ளார். தொடர்ந்து அங்கு வந்த லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள், இளநிலை பொறியாளர் சாம் செல்வராஜை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவருடைய ஆடைகளில் கட்டுக்கட்டாக பணத்தை பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. மேலும் அவரது காரை சோதனை செய்த போது அதில் ஒரு பையில் கோப்புகளுக்கு இடையேயும் பணம் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.

அந்த பணத்திற்கு உண்டான ஆவணங்கள் எதையும் அவரால் காட்ட முடியவில்லை. இதையடுத்து அந்த பணத்தை பறிமுதல் செய்த போலீஸார் அதனை முழுமையாக எண்ணிப் பார்த்த போது, 5 லட்சத்து 34 ஆயிரம் ரூபாய் இருந்தது தெரிய வந்தது. இது தொடர்பாக இளநிலை பொறியாளர் சாம் செல்வராஜ், அவரது உதவியாளர் ஹரிஹரன் மற்றும் ஒப்பந்ததாரர்கள் 5 பேரைக் கைது செய்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

x