கிராமத் தலைவரின் ஊழலுக்கு எதிராக ஆர்டிஐ மூலம் கேள்வி: கூரிய ஆயுதங்களால் கொலை செய்த கும்பல்


கடத்தல்

நில அபகரிப்பு மற்றும் பிற ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறப்படும் கிராமத் தலைவர் தேவேந்திர சிங்குக்கு எதிராக தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் கேள்வியெழுப்பிய நபர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம் இக்லாஸ் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோரை கிராமத் தலைவருக்கு எதிராக தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் கேள்வி எழுப்பிய 32 வயதுடைய நபரின் கொலை தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொலை செய்யப்பட்ட தேவ்ஜீத் சிங் கோரை கிராமத்தில் சைபர்கஃபே நடத்தி வந்தவர்.

காவல்துறையின் விசாரணையின்படி, நில அபகரிப்பு மற்றும் பிற ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறப்படும் கிராமத் தலைவர் தேவேந்திர சிங்குக்கு எதிராக தேவ்ஜீத் சிங் ஆர்டிஐ மூலம் மனுத்தாக்கல் செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை கிராமத் தலைவர் மற்றும் அவரது கூட்டாளிகளால் குச்சிகள் மற்றும் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டதில் தேவ்ஜீத் சிங் இறந்ததாக அவரது குடும்பத்தினர் கூறினர். அவரது சகோதரர் சுரேந்திர சிங்கும் தாக்குதலில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேவ்ஜீத் சிங்கின் குடும்ப உறுப்பினர்களின் புகாரின் அடிப்படையில், கிராமத்தலைவர் தேவேந்திர சிங், அவரது மகன் கார்த்திக் மற்றும் ஆறு பேர் மீது கொலைவழக்கு உட்பட பல பிரிவுகளின் கீழ் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆரம்பகட்ட விசாரணைக்குப் பிறகு, ஐபிசி 120பி (குற்றச் சதி) பிரிவின் கீழ் லுவ்குஷ், ஹர்வீர் மற்றும் தினேஷ் ஆகியோரின் பெயர்கள் எப்ஐஆரில் சேர்க்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். மற்ற குற்றவாளிகளைப் பிடிக்க போலீஸ் தேடுதல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.

x