லோக் ஆயுக்தா ரெய்டு: பக்கத்து வீட்டில் தங்கநகை பையை வீசிய அரசு அதிகாரி


கர்நாடகாவில் லோக் ஆயுக்தா சோதனையின் போது பக்கத்து வீட்டு ஜன்னல் வழியே தங்க நகைகள் நிறைந்த பையை அரசு அதிகாரி வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலத்தில் அரசுத்துறையில் பணியாற்றும் அதிகாரிகளின் வீடுகளை குறிவைத்து இன்று அதிகாலையில் இருந்து லோக் ஆயுக்தா அதிகாரிகள் அதிரடி ரெய்டில் ஈடுபட்டனர். இந்த நிலையில், பெங்களூருவில் நில அளவைத்துறையின் துணைக்கட்டுப்பாட்டு அதிகாரி அக்தர் அலி வீட்டில் லோக் ஆயுக்தா அதிகாரிகள் சோதனையில் நடத்தினர். பக்கத்து வீட்டின் ஜன்னல் அருகே அக்தர் அலி வீட்டின் முதல் தளம் உள்ளது. அங்கிருந்து அக்தர் அலி, பக்கத்து வீட்டு ஜன்னல் வழியாக பையை வீசினார்.

இதைப் பார்த்த பக்கத்து வீட்டில் வசிப்பவர், லோக் ஆயுக்தா அதிகாரிகளுக்கு போன் செய்தார். அங்கு லோக் ஆயுக்தா அதிகாரிகள் சென்று பையை சோதனையிட்டனர். அந்த பை நிறைய தங்க நகைகள் இருந்தன. அந்த பையை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தற்போது கிடைத்த தங்கத்தை எடை போட ஊழியர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். அக்தர் அலியிடம் இருந்து சில முக்கிய ஆவணங்களை கைப்பற்றிய குழுவினர், அவற்றை சோதனை செய்து வருகின்றனர். பக்கத்து வீட்டு ஜன்னல் வழியாக சில ஆவணங்களை அலி தள்ளிவிட்டதாக சந்தேகிக்கப்படுகிறது. எனவே, பக்கத்து வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டுள்ளது. அக்தர் அலி வீட்டில் இதுவரை 25 லட்சம் ரூபாய். ரொக்கம், 2.20 கிலோ தங்க நகைகள், 2 கிலோ வெள்ளி பொருட்கள், ஐம்பதுக்கும் மேற்பட்ட விலை உயர்ந்த கைக்கடிகாரங்கள், பல லட்சம் மதிப்புள்ள வைர நகைகள் மீட்கப்பட்டன.

இது குறித்து லோக் ஆயுக்தா எஸ்.பி வம்சிகிருஷ்ணா கூறுகையில், " பெங்களூரு நகரப் பிரிவு அதிகாரிகள் 3 அதிகாரிகளின் வீடுகளில் இன்று சோதனை நடத்தினர். அக்தர் வீட்டில் இருந்து ஏற்கெனவே 2.2 கிலோ தங்க நகைகள், 25 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் தங்க நகைகள் உள்ள பையை பக்கத்து வீட்டில் அக்தர் அலி வீசியுள்ளார். அதையும் எங்கள் குழுவினர் மீட்டு. விசாரணை நடத்தி வருகிறோம்" என்றார். லோக் ஆயுக்தா ரெய்டின் போது தங்க நகைகள் நிறைந்த பையை அரசு அதிகாரி பக்கத்து வீட்டில் வீசிய சம்பவம் பெங்களூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

x