சத்தீஸ்கரின் பெமேதரா மாவட்டத்தில் சிறுவன் ஒருவன் தனது வீட்டின் அருகே வசிக்கும் 10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துக் கொன்ற கொடூர சம்பவம் நடந்துள்ளது.
சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் இருந்து 90 கி.மீ தொலைவில் பெமேதரா மாவட்டம் உள்ளது. சனிக்கிழமையன்று சிட்டி கோட்வாலி காவல் நிலையப் பகுதியில் பாதிக்கப்பட்ட சிறுமி மர்மமான முறையில் அவரது வீட்டில், தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார். இதைத் தொடர்ந்து இச்சம்பவம் குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கழுத்தை நெரித்து கொல்லப்பட்டது தெரியவந்தது.
இதுபற்றி உள்ளூர் மக்களிடம் விசாரணை நடத்திய பிறகு, குற்றம் சாட்டப்பட்ட 17 வயது சிறுவனை போலீஸார் கைது செய்தனர்.
இது பற்றி பேசிய கோட்வாலி ஸ்டேஷன் ஹவுஸ் அதிகாரி அம்பர் சிங் பரத்வாஜ், "குற்றம் சாட்டப்பட்டவர் தனது மொபைல் போனில் ஆபாச வீடியோக்களைப் பார்ப்பதற்கு அடிமையாகிவிட்டார். ஆபாச படத்தைப் பார்த்த பிறகு, அச்சிறுவன் பாதிக்கப்பட்டவரின் வீட்டிற்குள் நுழைந்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். சிறுமி தனது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்துவிடுவாரோ என்ற அச்சத்தில், துப்பட்டாவால் கழுத்தை நெரித்து தூக்கிலிட்டு கொன்றுவிட்டு, மொட்டை மாடி வழியாக தப்பிச் சென்றுள்ளான். சிறுவன் மீது போக்சோ மற்றும் ஐபிசி பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது” என தெரிவித்தார்
குற்றம் சாட்டப்பட்ட சிறுவன் உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், துர்க் மாவட்டத்தில் உள்ள சிறார் இல்லத்தில் அடைக்கப்பட்டுள்ளான்.