ஹரியானாவில் கடந்த மூன்று ஆண்டுகளாக தனது 15 வயது மகளை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாக 36 வயது நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஹரியானா மாநிலம் குருகிராமைச் சேர்ந்த 8-ம் வகுப்பு மாணவி, கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டில் தனிமையில் இருந்த அவரது தந்தை மது போதையில் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பின்னர், கொலை மிரட்டல் விடுத்து பலமுறை பெற்ற மகளையே அந்த கொடூர தந்தை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக அந்த சிறுமி அளித்த புகாரில், "எனது தாய் வீட்டை விட்டு வெளியே செல்லும்போதெல்லாம் என் தந்தை என்னை பாலியல் வன்கொடுமை செய்வார். நான் எதிர்ப்பு தெரிவித்தால், அவர் என்னை வீட்டை விட்டு வெளியே துரத்துவேன் அல்லது கொன்றுவிடுவேன் என்று மிரட்டுவார். அதனால் நான் அமைதியாக இருந்தேன். என் தந்தை அக்டோபர் 28 அன்று என்னை மீண்டும் பாலியல் வன்கொடுமை செய்தார். என் நண்பர் ஒருவரிடம் இதைத் தெரிவித்தேன், அவர் என்னை ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் பெண் ஊழியர் ஒருவரிடம் அழைத்துச் சென்றார். அவர் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தார். சனிக்கிழமையன்று என் வீட்டிலிருந்து போலீஸார் என்னை மீட்டனர்" என்று தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு, குற்றவாளி ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர். குற்றம் சாட்டப்பட்ட மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த அந்த தச்சு தொழிலாளி, நகர நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார்.