கள்ளச்சாராயம் குடிக்கச் சென்றவர் கொலை: காவல் துறையைக் கண்டித்து உறவினர்கள் மறியல்


ஒசூர் அருகே, கள்ளச்சாராயம் குடிக்கச் சென்ற பெயின்டர் அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த மாயநாயக்கணப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் பெயின்டர் மாதேஸ்(37) குடிப்பழக்கத்திற்கு ஆளான இவர், தினந்தோறும் அருகே உள்ள கக்கதாசம் கிராமத்தில் சட்டவிரோதமாக கர்நாடக மாநிலத்திலிருந்து கொண்டு வந்து விற்கப்படும் கள்ளச்சாராயத்தை வாங்கிக் குடித்து வந்ததாகச் சொல்லப்படுகிறது.

நேற்றிரவு வழக்கம் போல கக்கதாசம் கிராமத்தின் ஏரிக்கு அருகே கள்ளச்சாராயம் வாங்கச் சென்றவர் அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. இரவு முழுவதும் அவரைத் தேடி வந்த நிலையில் இன்று காலை, கக்கதாசம் ஏரி நீரோடையில் அவர் சடலமாகக் கண்டெடுக்கப் பட்டார். அவரது உடலில் காயங்கள் இருந்ததால் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. சம்பவ இடத்துக்கு வந்த தேன்கனிக்கோட்டை காவல் நிலைய போலீஸார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க முயன்றனர்.

ஆனால் கள்ளச்சாராயம் விற்கப்படுவது போலீஸாருக்குத் தெரிந்தும், மாமூல் பெற்றுக்கொண்டு கண்டுகொள்ளாமல் இருந்ததே கொலைக்கான காரணம் என்றும், கள்ளச்சாராயம் விற்ற நபர்களே மாதேஸைக் கொலை செய்திருக்கலாம் என்றும் கூறி உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் தளி - தேன்கனிக்கோட்டை சாலை மாயநாயக்கணப்பள்ளி கிராமத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அங்கு வந்த காவல் துறை உயர் அதிகாரிகள் கள்ளச்சாராயம் விற்பதைத் தடுத்து கொலையாளிகளை விரைந்து பிடிப்பதாக அளித்தனர். அதை ஏற்று சாலை மறியலை அவர்கள் கைவிட்டனர். அதன்பின்னர் மாதேஸின் உடல், தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

x