மதுபான பாரில் ஏற்பட்ட தகராறு: கொலையில் முடிந்த விபரீதம்


சாந்தகுமார்

கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகே மதுபான பாரில் ஏற்பட்ட தகராறின் விளைவாக, பெங்களூரைச் சேர்ந்தவர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூரு தொட்டதோகூர் கிராமத்தைச் சேர்ந்த அஸ்வத் மகன் சாந்தகுமார்(30). கார் ஓட்டுநரான இவர் நேற்று முன்தினம் வீட்டை விட்டு நண்பருடன் வெளியில் செல்வதாகக் கூறிவிட்டுச் சென்றவர் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில் தளி அருகே எலேசந்திரம் & கோட்டரெட்டிபாளையம் செல்லும் சாலையில் உள்ள ஏரிக்கரையில் அவர் கொலை செய்யப்பட்டு சடலமாகக் கிடந்தார்.

விவரம் அறிந்து வந்த தளி காவல் நிலைய போலீஸார் அவரது உடலைவிட்டு அரசு மருத்துவமனைக்குப் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப் பதிவுசெய்து போலீஸார் விசாரித்து வரும் நிலையில் சாந்தகுமாரின் மனைவி சுஷ்மா தனது கணவர் கொலையில் சம்பந்தப்பட்டவர்கள் என்று சந்தேகப்படும் நபர்கள் மீது புகார் அளித்துள்ளார்.

அந்தப் புகாரில் கடந்த 15 தினங்களுக்கு முன்பு மது அருந்துவதற்காக அவரது கணவர் சாந்தகுமார் அவரது நண்பர்களும் மதுபானக் கடைக்குச் சென்றபோது வீர்சந்திரா கிராமத்தைச் சேர்ந்த ரவுடி நேபாளி மஞ்சுவிற்கும் அவர்களுக்கும் தகராறு ஏற்பட்டதாகவும் அது குறித்துக் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்தான் தனது கணவரைக் கொலை செய்திருப்பதாகவும் புகாரில் தெரிவித்துள்ளார். இந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார், 3 தனிப்படைகள் அமைத்து கொலையாளிகளைத் தேடி வருகின்றனர். குடி குடியைக் கெடுக்கும் என்ற பழமொழியை நிரூபிக்கும் வகையில் குடி கொலையும் செய்திருப்பது பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

x