காலிஸ்தான் பயங்கரவாதி லக்பீர் சிங் சாந்துவின் முக்கிய கூட்டாளி கைது: என்ஐஏ அதிரடி


புதுடெல்லி: ஆயுத விநியோகம் தொடர்பான பயங்கரவாத நெட்வொர்க் வழக்கில், காலிஸ்தானி பயங்கரவாதி லக்பீர் சிங் சாந்து (எ) லாண்டாவின் முக்கிய கூட்டாளியை தேசிய புலனாய்வு முகமை அமைப்பு (என்ஐஏ) கைது செய்துள்ளது.

காலிஸ்தானி பயங்கரவாதி லக்பீர் சிங் சாந்து (எ) லாண்டா. இவர் பயங்கர ஆயுதங்கள் விநியோக செயல்களில் ஒரு குழுவை இயக்கி வருகிறார். லக்பீர் சிங் சாந்து (எ) லாண்டாவின் முக்கிய கூட்டாளி பல்ஜீத் சிங் (எ) ராணா பாய். இவர் பாலி என்ற மற்றொரு பெயரிலும் அறியப்பட்டு வருகிறார். இந்நிலையில், மத்தியப் பிரதேசத்தின் பத்வானி மாவட்டத்தைச் சேர்ந்த பல்ஜீத் சிங் பஞ்சாப்பில் என்ஐஏ அதிகாரிகளால் நேற்று கைது செய்யப்பட்டார்.

இவர் பஞ்சாப்பில் லக்பீர் சிங் சாந்துவின் முகவர்களுக்கு ஆயுதங்கள் விநியோகிக்கும் முக்கிய கூட்டாளி ஆவார். என்ஐஏ வட்டார தகவலின் படி, வணிகர்கள் மற்றும் பிறரிடமிருந்து மிரட்டி பணம் பறித்தல் உள்பட பெரிய அளவிலான பயங்கரவாத நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு இவர்கள் விநியோகிக்கும் ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டது தெரியவந்துள்ளது.

இந்த வழக்கில் லக்பீர் சிங் சாந்துவின் கூட்டாளி என அடையாளம் காணப்பட்ட குர்பிரீத் சிங் கோபி மற்றும் மற்றொரு காலிஸ்தானி பயங்கரவாதி சத்னம் சிங் சத்தா ஆகியோரையும் என்ஐஏ ஏற்கெனவே கைது செய்துள்ளது.

பஞ்சாப் மற்றும் பிற இடங்களில் வன்முறைச் செயல்களைக் கட்டவிழ்த்துவிடும், தடை செய்யப்பட்ட காலிஸ்தானி பயங்கரவாத அமைப்புகளின் பெரிய சதித்திட்டத்தின் ஒரு பகுதியாக பல்ஜீத் சிங், சத்னம் சிங் சத்தாவுக்கு ஆயுதங்களை வழங்கியது தெரியவந்தது.

இதையடுத்து கடந்த ஆண்டு ஜூலை 10-ம் தேதி என்ஐஏ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது. காலிஸ்தானி பயங்கரவாத அமைப்புகளை ஒடுக்கும் நடவடிக்கையில் என்ஐஏ தொடர்ந்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது.

x