பிஹாரில் விஷவாயு தாக்கி 4 தொழிலாளர்கள் உயிரிழப்பு - ஆத்திரத்தில் தனியார் மருத்துவமனை சூறை


மோதிஹாரி: பிஹாரில் விஷ வாயு தாக்கி 4 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இதனால் ஆத்திரமடைந்த ஒரு கும்பல், தனியார் மருத்துவமனையை அடித்து நொறுக்கி சேதப்படுத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பிஹார் மாநிலம், கிழக்கு சம்பரான் மாவட்டம் டாக்கா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கிராமத்தில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய, நேற்று, 5 தொழிலாளர்கள் தொட்டிக்குள் இறங்கினர். அப்போது விஷவாயு தாக்கி அவர்கள் அனைவரும் மயங்கி விழுந்தனர். இதையடுத்து அவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள், 4 பேரும் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். ஒருவர் மட்டும் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் இந்த தகவலை அறிந்ததும், இறந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் சம்பந்தப்பட்ட மருத்துவமனை முன்பு திரண்டனர். அப்போது, உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்தினர், மருத்துவர்களின் அலட்சியமே உயிரிழப்புக்கு காரணம் என குற்றம் சாட்டினர்.

இதனால் ஆத்திரமடைந்த அங்கிருந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் திடீரென வன்முறையில் ஈடுபட்டனர். இதில் அந்த தனியார் மருத்துவமனை அடித்து நொறுக்கப்பட்டது. மேலும், மருத்துவமனையில் இருந்த ஆம்புலன்ஸ் வாகனம் தீ வைத்து கொளுத்தப்பட்டது.

தகவலறிந்து அங்கு வந்த டாக்கா போலீஸார், நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை மேற்கொண்டனர். அப்போது வன்முறையில் ஈடுபட்டவர்கள் தாக்கியதில் இரண்டு போலீஸார் காயமடைந்தனர். விஷவாயு தாக்கி தொழிலாளர்கள் உயிரிழப்பு மற்றும் அதைத் தொடர்ந்து நடந்த வன்முறை காரணமாக அப்பகுதியில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.

x