‘ஸ்லீப்பர் செல்’ களையெடுப்பு: பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் தென்மாநிலங்கள் ஒன்றிணையுமா?


அதிகரிக்கும் பயங்கரவாத அச்சுறுத்தலை எதிர்கொள்ள தென்னிந்திய மாநிலங்கள் ஒன்றிணைய வேண்டும் என்ற கர்நாடகத்தின் கோரிக்கை தற்போதைய சூழலில் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.

மங்களூரு நகரில் குக்கர் குண்டுவெடிப்பு சம்பவத்தை அடுத்து கன்னட பூமி உஷாராகி இருக்கிறது. குக்கர் குண்டு சுமந்து சென்ற முகமது ஷாரிக், சர்வதேச பயங்கவாத இயக்கமான ஐ.எஸ் அமைப்புடன் நெருக்கம் பாராட்டியது போலீஸ் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. மேலும் இந்திய பெரு நகரங்களை குறிவைத்து நாசவேலைகளுக்கு திட்டமிடும் பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவாக செயல்பட்டதாகவும், அது தொடர்பாக ஏற்கனவே காவல்துறை கைதுக்கும் ஆளானவன் என்றும் தெரிய வந்துள்ளது. குக்கர் குண்டு வெடிப்பின் காயங்களால் பேச முடியாது தவிக்கும் ஷாரிக் குணமடைந்ததும் புதிய தரவுகளை சேகரிக்க போலீஸார் காத்துள்ளனர். இதற்கிடையே முகமது ஷாரிக் பிடிபட்ட சூட்டில் வேகம் காட்டிய கர்நாடக போலீஸார் அந்த மாநிலத்தில் மட்டும் 18 ஸ்லீப்பர் செல் பேர்வழிகளை அடையாளம் கண்டு கைது செய்துள்ளனர்.

ஷாரிக்கின் குக்கர் குண்டு தயாரிப்பு முயற்சிகளும் அவனது தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலங்களுக்கான தொடர் பயணங்களும் பெரும் நெட்வொர்க்கின் கண்ணியாக அவன் செயல்பட்டதை உறுதி செய்கின்றன. குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பான காவல்துறை விசாரணைகளை ஆய்வு மேற்கொண்டு வரும் மாநில உள்துறை அமைச்சர் ஞானேந்திரா, ‘மங்களூருக்கு முன்னதாக தமிழ் நாட்டின் கன்னியாக்குமரி, மதுரை, நாகர்கோவில், கோயம்புத்தூர் மற்றும் கேரளாவின் கொச்சிக்கும் பயணப்பட்டுள்ளான்’ என்பதை அழுத்தமாக குறிப்பிட்டு வருகிறார். மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை, ‘பயங்கரவாத செயல்களில் ஈடுபடும் நபர்கள் மட்டுமன்றி அவர்களுக்கு ஆதரவளிக்கும் ஸ்லீப்பர் செல்களை களையெடுக்க தென்மாநிலங்கள் ஒன்றிணைய வேண்டும். இதற்காக மாநில முதல்வர்களுக்கு கடிதம் எழுதுவதுடன், ஸ்லீப்பர் செல் அழிப்புக்கு தென்மாநில டிஜிபிக்களின் கூட்டு நடவடிக்கையையும் உளவு தகவல்களின் பரிமாற்றத்தையும் கோருவோம்’ என தெரிவித்துள்ளார்.

ஆனால், ’தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் கர்நாடகத்துக்கு வெளியே பயிற்சி பெறுவதுடன், குற்றத்தை அரங்கேற்றிய பின்னர் பக்கத்து மாநிலங்களுக்கு தப்பிவிடுகிறார்கள்; இது கர்நாடக மாநிலத்துக்கு பெரும் தலைவலியாகிறது’ என்று ஆளும் பாஜக அமைச்சர்கள் மாற்றுப்பாதையில் குற்றச்சாட்டுகளை சுமத்துவது, மேற்படி தென் மாநிலங்களின் ஒருங்கிணைந்த நடவடிக்கைக்கு உலை வைக்கவும் கூடும். முன்னதாக மாநிலத்தில் தலைதூக்கும் தீவிரவாத செயல்களுக்கு ’பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா’ போன்ற அமைப்புகளை முந்தைய காங்கிரஸ் ஆட்சியாளர்கள் வளர்த்துவிட்டதுதான் காரணம் என குற்றம்சாட்டியிருந்தனர். பயங்கரவாத நடவடிக்கைக்கு எதிரான ஸ்லீப்பர் செல் களையெடுப்புக்கு மாநிலங்களின் ஒருங்கிணைந்த நடவடிக்கை அவசியம் என்பதோடு அதில் அரசியல் கலவாதிருப்பதும் முக்கியம்.

x