கர்நாடகாவில் 55 இடங்களில் லோக் ஆயுக்தா ரெய்டு: அதிகாலையில் அதிரடி


பெங்களூரு: கர்நாடகாவில் இன்று அதிகாலை முதல் 12 அதிகாரிகளுக்குச் சொந்தமான 55 இடங்களில் லோக் ஆயுக்தா அதிகாரிகள் சோதனை நடத்தி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலத்தில் அரசுத்துறையில் பணியாற்றும் அதிகாரிகளின் வீடுகளை குறிவைத்து இன்று அதிகாலையில் இருந்து லோக் ஆயுக்தா அதிகாரிகள் அதிரடி ரெய்டில் ஈடுபட்டுள்ளனர். பெங்களூரு நகரில் 6 வீடுகளிலும், பெங்களூரு ஊரக பகுதிகளில் உள்ள 2 வீடுகளிலும் ஷிமோகா மாவட்டத்தில் 2 வீடுகளிலும், யாதகிரி மற்றும் தும்கூரில் தலா ஒரு வீட்டிலும் லோக்ஆயுக்தா அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

இதில் தொட்டபல்லாபூர் சீனியர் கால்நடை மருத்துவர் சித்தப்பா, ஹெப்பகோடி நகராட்சி நிர்வாக ஆணையர் நரசிம்மமூரத்தி, பெங்களூரு நகரத்தில் நிலம் கையப்படுத்துதல் துறை அதிகாரி ராஜா, வரித்துறை இணை ஆணையர் ரமேஷ் குமார், சட்ட நில அறிவியல் துணைக்கட்டுப்பாட்டாளர் அக்தர் அலி, அந்தர்கங்கே கிராம பாதுகாப்புத்துறை அதிகாரி நாகேஷ் மற்றும் சேத்தன் குமார், ஆனந்த் உள்பட பலருக்குச் சொந்தமான வீடுகளில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.

மேலும், தும்கூரில் உள்ள கேஐஏடிபி கூடுதல் இயக்குநர் சி.டி.முத்துகுமாரின் வீடு மற்றும் அலுவலகத்தில் லோக்ஆயுக்தா அதிகாரிகள் சோதனை நடத்தினர். மேலும் சி.டி.முத்துக்குமாருக்கு சொந்தமான 7 இடங்களில் இந்த ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது. மேலும் சிக்கநாயக்கனஹள்ளி தாலுகாவில் உள்ள ஷெட்டிகெரே ஹோப்ளி ரங்கநாதபுரத்தில் சி.டி.முத்துகுமார் என்பவருக்குச் சொந்தமான பண்ணை வீடு உள்ளது. தும்கூர் அந்தர்சனஹள்ளி தொழிற்பேட்டையில் பிளாஸ்டிக் பாட்டில்கள் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது.

இந்த இடங்கள் அனைத்திலும் லோக் ஆயுக்தா அதிகாரிகளால் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது. வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்த புகாரின் பேரில், இந்த சோதனைகள் நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

x