சென்னை | ரயில் பயணிகளிடம் செல்போன்கள் திருடிய ஜார்க்கண்ட் இளைஞர்கள் கைது


சென்னை: விரைவு ரயிலில் வந்த பயணிகளிடம் செல்போன்களைத் திருடிய ஜார்க்கண்ட் மாநில இளைஞர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர். ஜார்க்கண்டில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு நேற்று முன்தினம் விரைவு ரயில் வந்தது. இந்த ரயிலில் வந்த பயணிகள் சிலரின் செல்போன்கள் திருடப்பட்டதாக ரயில்வே போலீஸாருக்கு புகார் வந்தது.

இதன்பேரில், குற்றவாளிகளை சென்ட்ரல் ரயில்வே போலீஸார் தேடி வந்தனர். இந்நிலையில், அமைந்தகரை, ஸ்கைவாக் அருகே நேற்று முன்தினம் இரவு போலீஸார் வாகன சோதனை செய்தபோது, அந்த வழியாக வந்த 4 பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர். அப்போது, அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர். இதையடுத்து அவர்களை சோதித்தபோது, 4 செல்போன்களை மறைத்து வைத்திருந்தது தெரிந்தது.

அதுகுறித்து விசாரித்துக் கொண்டிருந்தபோது அந்த வழியாக வந்த 2 ஆட்டோக்களில் தப்பினர். ஒரு ஆட்டோவில் தப்பி சென்ற இருவரை‌ போலீஸார் விரட்டிப் பிடித்தனர். அவர்களிடம் விசாரித்ததில், பிடிபட்டது ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த விஷால் குமார் (22), பாண்டுநைனா (24) என்பதும் தப்பி ஓடிய நபர்கள் மணி, குமார் என்பதும் தெரியவந்தது.

மேலும் இவர்கள் ஜார்க்கண்ட்டில் இருந்து ரயிலில் சென்னைக்கு வந்தபோது, ரயில் பயணிகளிடம் இருந்து 5 செல்போன்களைத் திருடியது தெரிய வந்தது.

இதையடுத்து அவர்களை கைது செய்த போலீஸார், சென்ட்ரல் ரயில்வே போலீஸாரிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. மேலும் தப்பி ஓடிய இருவரையும் தேடி வருகின்றனர்.

x