உத்தரபிரதேச மாநிலம் மதுரா மாவட்டத்தில் ட்ராலி பையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த இளம்பெண்ணின் சடலம் சாலையோரத்தில் கண்டெடுக்கப்பட்டது. இது தொடர்பாக தற்போது அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
மதுரா மாவட்டத்தில் உள்ள யமுனா விரைவுச் சாலையின் சர்வீஸ் சாலையில் ட்ராலி பைக்குள் அடைக்கப்பட்டிருந்த ஒரு பெண்ணின் சடலம் சில நாட்களுக்கு முன்பு கண்டெடுக்கப்பட்டது. 25 வயது மதிக்கத்தக்க அப்பெண்ணின் சடலத்தைக் கைப்பற்றிய போலீஸார் அந்த பெண் யார், அவர் எதற்காக கொல்லப்பட்டார் என தீவிர விசாரணை நடத்தினர். இதில் பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தையே அவரை சுட்டுக் கொன்றது கண்டுபிடிக்கப்பட்டது.
போலீஸாரின் விசாரணையில், அந்த பெண் டெல்லியின் பதர்பூரில் வசிக்கும் ஆயுஷி யாதவ் என அடையாளம் காணப்பட்டுள்ளார். சில நாட்களுக்கு முன்பு, ஆயுஷி தனது தந்தை நித்தேஷ் யாதவிடம் சொல்லாமல் எங்கோ சென்றுவிட்டார். அவர் வீடு திரும்பிய பிறகு, இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது. இதனால் பொறுமை இழந்த அப்பெண்ணின் தந்தை அவரை சுட்டுக் கொன்றார். அதன் பின்னர் அவரது உடலை பிளாஸ்டிக்கில் சுற்றி, டிராலி பையில் அடைத்து, அந்த பையை உத்தரபிரதேச மாநிலம் மதுராவில் உள்ள யமுனா விரைவு சாலையில் வீசியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.