மும்பை: மகாராஷ்டிராவில் கடந்த 2022-ம் ஆண்டு நடைபெற்ற குடிமைப்பணிகள் தேர்வில் தேர்ச்சி பெற்று பயிற்சி ஐஏஎஸ் அதிகாரியானவர் பூஜா கேத்கர்.
மாற்றுத்திறனாளிகளுக்கான இட ஒதுக்கீட்டையும் இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கான இட ஒதுக்கீட்டையும் தவறாகப் பயன்படுத்தி பணியைப் பெற்றுள்ளார் என்று பூஜா கேத்கர் மீது புகார் எழுந்தது. இதைத் தொடர்ந்து அவர் தொடர்பான முழு விவரங்களை ஆய்வுசெய்ய மத்திய பணியாளர் துறையின் கூடுதல் செயலர் தலைமையில் ஒருநபர் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து, பூஜா கேத்கரின் பயிற்சியை மாநில அரசு கடந்த 16-ம் தேதி நிறுத்தி வைத்தது.
மேலும் பூஜா குடும்பத்தினர் தொடர்பான காணொலி பதிவு ஒன்று கடந்த சில நாட்களாக சமூக ஊடகங்களில் பரவியது. அந்த காணொலியில், கடந்த 2023-ம் ஆண்டு ஜூன் 5-ம் தேதி புனா நகர் அருகில் உள்ள ததாவாடி கிராமத்தில் உள்ள விவசாயிகளை துப்பாக்கி முனையில் பூஜாவின் தாயார்மனோரமா மிரட்டிக் கொண்டிருப்பது பதிவாகி உள்ளது.
போலீஸ் விசாரணையில் பூஜா குடும்பத்தினர் சட்டவிரோத நில அபகரிப்பில் ஈடுபட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து பூஜாவின் தாயார் மனோரமா, தந்தை திலீப் மற்றும் ஐவர்மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். ஆனால், விஷயம் தெரிந்து மனோரமா தலைமறைவானார். ராய்காட் மாவட்டத்தில் மஹாட் பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் மனோரமா தங்கி இருப்பது தெரியவந்த போலீஸார் அங்கு விரைந்து சென்றனர். நேற்று அதிகாலையில் குறிப்பிட்ட விடுதியில் மனோரமா கைது செய்யப்பட்டார்.