துப்பாக்கியை பயன்படுத்த முயன்றபோது தவறுதலாக சுட்டதில் தலைமைக்காவலர் உயிரிழப்பு; எஸ்ஐ படுகாயம்


அலிகர்: உத்தரப் பிரதேச மாநிலம், அலிகரில் இன்று காலை துப்பாக்கியை பயன்படுத்த முயன்றபோது தவறுதலாக சுட்டதில் குண்டு பாய்ந்து தலைமைக் காவலர் உயிரிழந்தார். மேலும், ஒரு உதவி காவல் ஆய்வாளர் (எஸ்ஐ) படுகாயமடைந்தார்.

உத்தரப் பிரதேச மாநிலம், அலிகர் - புலந்த்ஷாஹர் மாவட்ட எல்லையில் உள்ள ஒரு கிராமத்தில் இன்று காலை, கால்நடை கடத்தல்காரர்களை பிடிக்க சிறப்பு அதிரடி குழுவும் (எஸ்ஓஜி) மற்றும் இரண்டு காவல் நிலையங்களின் போலீஸாரும் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த நடவடிக்கையின் போது இன்ஸ்பெக்டர் அசார் உசேன் கைத்துப்பாக்கியை பிரயோகப்படுத்த முயன்றார். அப்போது அது சரியாக செயல்படவில்லை. இதையடுத்து எஸ்ஐ- ராஜீவ் குமார் துப்பாக்கியை வாங்கி அதன் லாக்கை திறக்க முயன்றார்.

அப்போது, துப்பாக்கியிலிருந்து எதிர்பாராதவிதமாக அவரது வயிற்றில் குண்டு பாய்ந்தது. மேலும், அருகில் இருந்த தலைமைக் காவலர் யாகூப்பின் தலையிலும் குண்டு பாய்ந்தது. படுகாயமடைந்த அவர்கள் இருவரையும் அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர்.

ஆனால், தலைமைக் காவலர் யாகூப் வழியிலேயே உயிரிழந்தார். எஸ்ஐ- ராஜீவ் குமார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக மூத்த காவல் கண்காணிப்பாளர் (எஸ்எஸ்பி) சஞ்சீவ் சுமன் தெரிவித்துள்ளார்.

x