கர்நாடகா: உத்தர கன்னடா நிலச்சரிவில் 3 பேர் உயிரிழப்பு, 15 பேரை மீட்கும் பணி தீவிரம்


உத்தர கன்னடா: கர்நாடகா மாநிலம், உத்தர கன்னடா மாவட்டத்தில் உள்ள ஷிரூரில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதியிலிருந்து 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும், அங்கு சிக்கியுள்ள 15 பேரை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கர்நாடகா மாநிலம், உத்தர கன்னடா மாவட்டத்தில் கடந்த ஒருவாரமாக தொடர் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஷிரூரில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் சிக்கி உயிரிழந்த 3 பேரின் உடல்கள் இன்று மீட்கப்பட்டன. இதன் மூலம் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. மூன்றாவது நாளாக இன்றும் மீட்பு பணி நடைபெற்று வருகிறது.

உயிரிழந்தவர்கள் அவந்திகா (5), முருகன் (45), சின்னா (55) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். 5 வயது சிறுமி அவந்திகா, டீக்கடை உரிமையாளரான லட்சுமன் நாயக்கின் மகள். குழந்தை உயிரிழப்பால் அவரது முழு குடும்பமும் சோகத்தில் மூழ்கியுள்ளது. முருகனும், சின்னாவும் தமிழ்நாட்டைச் சேர்ந்த கேஸ் டேங்கர் லாரி ஓட்டுநர்கள் என தெரியவந்துள்ளது.

இவர்களது உடல்கள் 35 முதல் 40 கிலோ மீட்டர் தொலைவில் கங்காவலி ஆற்றில், புனித யாத்திரை மையமான கோகர்ணாவைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு அருகில் இருந்து அதிகாரிகளால் மீட்கப்பட்டன. மேலும், ஒரு குடும்பத்தினர் பயணித்த பென்ஸ் காரின் ஜிபிஎஸ் மூலம் அந்த கார் சிக்கியிருந்த இடத்தை அதிகாரிகள் கண்டறிந்தனர். அதே இடத்தில் ஒரு டிராக்டரும் நிலச்சரிவில் புதையுண்டது கண்டறியப்பட்டது.

நிலச்சரிவு காரணமாக கங்காவலி ஆற்றில் ஒரு தீவு பகுதி உருவாகியுள்ளது. அதில் மேலும் பலர் சிக்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அப்பகுதியில் பெய்து வரும் இடைவிடாத மழை, மீட்பு நடவடிக்கைகளுக்கு இடையூறாக உள்ளது. இப்பகுதியில் நெடுஞ்சாலை உள்பட பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இங்கே தீயணைப்பு துறையினர், அவசரகால சேவைகள் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் (என்டிஆர்எஃப்) மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

x