ஆஸ்திரேலியாவில் நீர்வீழ்ச்சியில் மூழ்கி 2 இந்திய மாணவர்கள் உயிரிழப்பு


புதுடெல்லி: ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் உள்ள கெய்ர்ன்ஸ் அருகே மில்லா மில்லா நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்ற இரண்டு இந்திய மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

ஆந்திர பிரதேச மாநிலம், பாபட்லா மாவட்டத்தைச் சேர்ந்தவர் சைதன்யா முப்பராஜு, பிரகாசம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சூர்ய தேஜா பாப்பா. இவர்கள் இருவரும் ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயின்று வந்தனர். இந்நிலையில் இவர்கள் இருவரும் அங்குள்ள குயின்ஸ்லாந்து கெய்ர்ன்ஸ் அருகே மில்லா மில்லா நீர்வீழ்ச்சியில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று நீராடச் சென்றனர்.

அப்போது இவர்கள் இருவரில் ஒருவர் தண்ணீரில் மூழ்கி உயிருக்குப் போராடினார். அவரை காப்பாற்றச் சென்ற மற்றொருவரும் நீரில் மூழ்கி இருவரும் உயிரிழந்துவிட்டதாக குயின்ஸ்லாந்து போலீஸார் தெரிவித்துள்ளனர். முன்னதாக நீரில் மூழ்கிய இருவரையும் கண்டுபிடிக்க தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், அவர்கள் உடனடியாக கண்டுபிடிக்கப்படவில்லை.

தேடுதல் பணியை தீவிரப்படுத்த அதிகாரிகள் ஹெலிகாப்டரை அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவ இடத்தில் அவர்களுக்கு மருத்துவ உதவி வழங்க ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவக் குழுவினர் தயார் நிலையில் இருந்தனர்.

எனினும், இரு இந்திய மாணவர்களையும் காப்பாற்ற இயலவில்லை. இது தொடர்பாக இந்திய அரசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆஸ்திரேலியாவில் கடந்த 2018 முதல் 2023ம் ஆண்டு வரை, பல்வேறு சம்பவங்களில் 35 இந்திய மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.

x