கணவருக்கு ஸ்லோ பாய்சன் கொடுத்தாரா புதுமணப்பெண்? - முறை தவறிய காதலால் விபரீதம்


கேரள வாலிபர் ஷாரோன்ராஜிற்கு, குமரி எல்லையோரப் பகுதியைச் சேர்ந்த அவரது காதலி கிரீஸ்மா எனும் பெண் ஜீஸில் விசம் கலந்து கொடுத்த அதிர்ச்சியில் இருந்தே மக்கள் இன்னும் மீளவில்லை. இந்நிலையில் தன் கள்ளக் காதலனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்ய மனைவி திட்டம் தீட்டியதாக சொல்லப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் ஆழ்வார்கோயில் பகுதியைச் சேர்ந்த வடிவேல் முருகன்(32) கட்டுமானத் தொழிலாளியாக உள்ளார். இவருக்கும் சுஜா என்னும் பெண்ணுக்கும் கடந்த ஆகஸ்ட் 31-ம் தேதி திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் வீட்டில் திடீரென மயங்கி விழுந்த வடிவேல் முருகன் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருகிறார். இந்நிலையில் இரணியல் காவல் நிலையத்தில் அவர் புகார் ஒன்றும் கொடுத்துள்ளார்.

அதில், “என் மனைவி திருமணத்திற்கு முன்பே வேறு ஒரு வாலிபரைக் காதலித்தார். திருமணத்திற்கு பின்பும் அவரோடு தொடர்பில் உள்ளார். அவரோடு சேர்ந்து என்னைக் கொலை செய்ய வியூகம் வகுத்துள்ளார். எனக்கு மெல்லக் கொல்லும் விசத்தைக் கொஞ்சம், கொஞ்சமாக உணவில் கலந்து கொடுத்துள்ளார். இதுதொடர்பாக என் மனைவி சுஜா, அவரது கள்ளக் காதலனுடன் பேசும் வாட்ஸ் அப் பதிவுகள் என்னிடம் சாட்சியாக உள்ளது. போலீஸார் இருவரையும் கைது செய்து, எனக்கு என்ன வகையான விசம் கொடுக்கப்பட்டது என்பதை விசாரித்து உரிய சிகிச்சை கிடைக்க வழிசெய்ய வேண்டும்” என கூறியுள்ளார்.

இதனிடையே வடிவேல் முருகனின் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு உண்மையிலேயே அவருக்கு மெல்லக் கொல்லும் விசம் கொடுக்கப்பட்டதா என ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதனிடையில் மணப்பெண்ணின் குடும்பத்தினர் வடிவேல் முருகனுக்கு ரத்த அழுத்தம் இருப்பதாகவும் அதனால் தான் மருத்துவ சிகிச்சையில் உள்ளார் என்றும், வேண்டுமென்றே தன் மகள் பெயரை கெடுக்கின்றனர் எனவும் கூறியுள்ளனர். ரத்த மாதிரிகளின் முடிவு தெரிந்த பின்பே இவ்வழக்கின் உண்மைத்தன்மை தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

x