ஆந்திராவில் பயங்கரம்: ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி நிர்வாகி நடுரோட்டில் வெட்டி படுகொலை


பல்நாடு: ஆந்திரப் பிரதேச மாநிலம், பல்நாடு மாவட்டத்தில் நேற்று இரவு, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி இளைஞர் அணி நிர்வாகி நடுரோட்டில் வெட்டிக் கொல்லப்பட்டார்.

ஆந்திரப் பிரதேச மாநிலம், ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் இளைஞரணி நிர்வாகி ஷேக் ரஷீத். இவர் நேற்று இரவு பல்நாடு மாவட்டத்தில் உள்ள வினுகொண்டா நகரில் மக்கள் நடமாட்டம், போக்குவரத்து மிகுந்த சாலையில் ஷேக் ஜிலானி என்பவரால் வெட்டி கொல்லப்பட்டார். இந்த கொலை சம்பவத்தை அப்பகுதியில் இருந்தவர்கள் வீடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர்.

ஷேக் ரஷீத்தின் கழுத்தில் வெட்டுவதற்கு முன்பாக, அவரது இரண்டு கைகளையும் துண்டித்ததாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். நடுரோட்டில் மக்கள் நடமாட்டம் மிகுந்த சாலையில் நடந்த இந்த கொலை சம்பவத்தால் அப்பகுதியில் பீதியை ஏற்படுத்தியது. இந்த கொலைக்கு பின்னால் தனிப்பட்ட பகைமை காரணமாக இருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும், இது குறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருவதாகவும், பல்நாடு காவல் கண்காணிப்பாளர் காஞ்சி ஸ்ரீனிவாஸ் ராவ் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த சம்பவத்தின் பின்னணியில் ஏதேனும் அரசியல் நோக்கங்கள் இருப்பதாக வெளியான ஊகங்களை அவர் நிராகரிதார். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வினுகொண்டா நகரில் கடுமையான தடை உத்தரவுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது என்றும், அமைதி மற்றும் ஒழுங்கை சீர்குலைக்கும் முயற்சிகளில் ஈடுபடுவோர் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் காவல் கண்காணிப்பாளர் காஞ்சி ஸ்ரீனிவாஸ் ராவ் எச்சரித்துள்ளார்.

சமீப காலத்தில் தமிழ்நாடு, பீகார், ஆந்திர பிரதேசம் ஆகிய மாநிங்களில் அரசியல் பிரமுகர்கள் அடுத்தடுத்து படுகொலை செய்யப்பட்ட சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

x