தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஒரே நேரத்தில் சோதனை மற்றும் விசாரணை மேற்கொண்டு வரும் தேசிய புலனாய்வு முகமை(என்ஐஏ), கோவையில் மட்டும் 20 இடங்களில் மையம் கொண்டுள்ளது. மேலும் சீர்காழியில் ஒருவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டது.
கோவையில் அக்.23 அன்று ஜமேஷா முபின் என்பவர் கார் குண்டு வெடிப்பு முயற்சியில் பலியானதை தொடர்ந்து, தமிழகத்தில் தேசிய புலனாய்வு முகமை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது. இன்று(நவ.10) காலையில் தொடங்கி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஒரு சேர விசாரணை மற்றும் தேடல் நடவடிக்கைகளில் என்ஐஏ ஈடுபட்டு வருகிறது.
கோவையில் மட்டும் 20 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் மையம் கொண்டுள்ளனர். கோட்டைமேடு, செல்வபுரம், போதனூர், குனியமுத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் தமிழக போலீஸார் புடை சூழ என்ஐஏ அதிகாரிகள் தீவிர வேட்டை நடத்தி வருகின்றனர். உக்கடம் அருகே வீட்டுவசதி வாரிய குடியிருப்பு ஒன்றில் கிட்டத்தட்ட வீடுவீடாக விசாரித்தனர்.
கோவை உட்பட என்ஐஏ மேற்கொண்டு வரும் இன்றைய தமிழக தேடல் அனைத்தும், கோவை கார் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 5 பேரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் தொடர்ந்து வருகிறது. சர்வதேச பயங்கரவாத அமைப்பான ஐஎஸ் அமைப்பின் அனுதாபிகள் மற்றும் தகவல்தொடர்பில் உள்ளவர்கள் என சந்தேக வளையத்துக்கு உட்பட்டவர்களை குறிவைத்து என்ஐஏ விசாரணை தொடர்ந்து வருகிறது.
கோவை தவிர்த்து சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் என்ஐஏ தேடல் நடந்து வருகிறது. சீர்காழி அருகே திருமலைவாசலை சேர்ந்த அல் ஃபாசித் என்பவரிடம் என்ஐஏ அதிகாரிகள் இன்று மணிக்கணக்கில் கிடுக்கிப்பிடி விசாரணைகளை தொடர்ந்தனர். ஐஎஸ் அமைப்புடனான தொடர்பு குறித்த சந்தேகத்தின் அடிப்படையில் ஏற்கனவே என்ஐஏ விசாரணைக்கு ஆளாகியிருக்கும் அல் ஃபாசித்திடம் இன்று மீண்டும் விசாரணை நடந்ததுடன், அவரிடமிருந்து செல்போன், டிஜிட்டல் சாதனங்கள் மற்றும் சில ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.