கேரள ஆர்எஸ்எஸ் நிர்வாகி கொலை வழக்கை விசாரிக்கும் விசாரணை அதிகாரிக்கு அதிகரிக்கும் கொலை மிரட்டல்கள் தொடர்பாக புதிய வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கேரளாவில் அண்மை மாதங்களாக இந்துத்துவ மற்றும் இஸ்லாமிய அமைப்புகளுக்கு இடையிலான மோதல் தீவிரமடைந்து வருகிறது. அரசியல் சாடல், கருத்து மோதல் என்பதாக அல்லாது, பரஸ்பரம் கொலைகளை அரங்கேற்றும் அளவுக்கு அங்கே சுமூகம் கெட்டிருக்கிறது.
ஆர்எஸ்எஸ் அமைப்பின் பாலக்காடு மாவட்ட முன்னாள் செயலராக இருந்தவர் எஸ்.கே.சீனிவாசன். இவர் ஏப்ரல் 16 அன்று பாகக்காடு அடுகே ஆறு பேர் கொண்ட கும்பலால் வெட்டிக் கொல்லப்பட்டார். பீப்பிள் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் நிர்வாகி சுபைர் என்பவர் கொலையான 24 மணி நேரத்தில், சீனிவாசனின் கொலை அங்கேறியது.
சீனிவாசன் தொடர்பான வழக்கை கையாளும் எம்.அனில் குமார், பீப்பிள் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் பாலக்காடு மாவட்ட செயலர் அபூபக்கர் சித்திக் உட்பட 34 பேரை இதுவரை கைது செய்துள்ளார். அனில் குமாரின் விசாரணை நெடுக அவருக்கு மிரட்டல்கள் அதிகரித்து வருவதாக சொல்லப்படுகிறது. சீனிவாசன் கொலைவழக்கின் விசாரணை இறுதி கட்டத்தை எட்டியுள்ள சூழலில் அனில்குமாருக்கு எதிரான மிரட்டல்கள் தீவிரமாக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன.
அண்மையில் அனில் குமாரை அலைபேசி வாயிலாக மிரட்டிய மர்ம நபர், ‘உனக்கான சவப்பெட்டியை தயார் செய்துகொள்’ என்று அச்சுறுத்தி இருக்கிறார். இது தொடர்பாக பாலக்காடு தெற்கு காவல்நிலையத்தில் தற்போது புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.