பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாக நூதன மோசடி: இருவர் கைது!


சென்னையில் பணத்தை இரட்டிப்பாக்கித் தருவதாக ரூபாய் நோட்டுகளுக்கு மத்தியில் வெள்ளை தாள்களை வைத்து நூதன மோசடியில் ஈடுபட்ட இருவரை போலீஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னையில், இரட்டிப்பு பணம் தருவதாகக் கூறி நூதன முறையில் பொதுமக்களை மர்ம கும்பல் மோசடி செய்வதாக, தெற்கு மண்டல திட்டமிட்ட குற்ற நுண்ணறிவு பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் ஆய்வாளர் சாகுல் அமீது தலைமையிலான போலீஸார் தீவிரமாக கண்காணித்து வந்தனர். அதன்படி, இரட்டிப்பு பணம் தருவதாகச் சொல்லி மோசடி செய்யும் கும்பல் கோயம்பேட்டில் ரூபாய் 10 லட்சத்துடன் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் போலீஸார் அங்கு சென்று கண்காணித்தனர்.

அப்போது, கோயம்பேடு பஸ் நிலையத்தில் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டு இருந்த இரண்டு பேரை மடக்கி சோதனை செய்தனர். அவர்களிடம் கட்டுக்கட்டாக பணம் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அந்தப் பணக்கட்டுகளைச் சோதனை செய்த போது பணக்கட்டுக்கள்லின் மேல் மற்றும் அதற்கு கீழ் பகுதியில் மட்டும் 500 ரூபாய் நோட்டுகளை வைத்துவிட்டு இடையில் வெள்ளை தாள்களை வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும், ஐந்து லட்சம் ரூபாய் கொடுக்கும் நபர்களிடம், அதனை ரூ.10 லட்சமாக கொடுப்பதற்காக இந்தக் கும்பல் அங்கு வந்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீஸார் அந்த இரண்டு பேரையும் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், பிடிபட்டவர்கள் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிக் (22), புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த சண்முகவேல் (52) என்பது தெரியவந்தது. இருவரும் பல்வேறு நபர்களிடம் பணத்தை இரட்டிப்பாக தருவதாகக் கூறி நூதன முறையில் மோசடி செய்து வந்ததும் தெரிய வந்தது.

அப்படி ஒருவரை மோசடி செய்வதற்காகவே கையில் போலியான ரூபாய் கட்டுகளை ரூ.10 லட்சம் இருப்பது போல் எடுத்து வந்துள்ளனர். பிடிபட்ட நபர்களிடம் இருந்து 48 ஆயிரத்து 500 ரூபாயையும், வெள்ளைத் தாள்களையும் போலீஸார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து பிடிப்பட்ட இருவரிடமும் கோயம்பேடு போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

x