சென்னை: 100 கோடி ரூபாய் மதிப்புடைய நிலத்தை மோசடியாக பத்திரப்பதிவு செய்ததாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த மோசடிக்கு உடந்தையாக இருந்ததாக வில்லிவாக்கம் காவல் ஆய்வாளர் பிரித்விராஜ் கைது செய்யப்பட்டுள்ளார்.
கரூர் மாவட்டம் குப்பிச்சிபாளையம் பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் என்பவரது 100 கோடி ரூபாய் மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மோசடியாக பத்திரப்பதிவு செய்து கொண்டதாக புகார் எழுந்தது. இந்த புகார் தொடர்பாக கரூர் நகர காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், வழக்கு சிபிசிஐடி போலீஸுக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் முன்ஜாமின் வழங்க கோரி எம்.ஆர்.விஜயபாஸ்கர் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டதால், சிபிசிஐடி போலீஸார் அவரை கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டு வந்தனர்.
இதனிடையே கேரளாவில் தலைமறைவாக இருந்த எம்.ஆர்.விஜயபாஸ்கரை நேற்று சிபிசிஐடி தனிப்படை போலீஸார் கைது செய்து, கரூர் அழைத்து வந்தனர். பின்னர் அவரிடம் விசாரணை மேற்கொண்ட போலீஸார் நேற்று இரவு அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது அவரை வருகிற 31ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க, நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அவர் தற்போது திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக வில்லிவாக்கம் காவல் ஆய்வாளர் பிரித்விராஜ் என்பவரை சிபிசிஐடி போலீஸார் கைது செய்துள்ளனர். விஜயபாஸ்கர் அமைச்சராக பதவி வகித்த போது, கரூர் நகர காவல் நிலையத்தில் பிரித்விராஜ் ஆய்வாளராக பணியாற்றி வந்துள்ளார். அப்போது பிரகாஷின் மகள் சோபனாவின் 22 ஏக்கர் நிலத்திற்கான ஆவணங்கள் மாயமாகி விட்டதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரின் பேரில், ஆவணங்களை கண்டுபிடிக்க முடியவில்லை என பிரித்விராஜ் போலிச் சான்று அளித்ததாக கூறப்படுகிறது. ஆவணங்கள் மாயமானதாக பிரித்விராஜ் அளித்த சான்றின் அடிப்படையிலேயே, இந்த பத்திரப் பதிவு நடைபெற்று இருப்பதாக கூறப்படும் நிலையில் தற்போது பிரித்விராஜையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.