திண்டிவனம் அருகே 2 சிறுமிகள் கூட்டு பாலியல் வன்கொடுமை: 15 பேருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை


கோப்புப்படம்

விழுப்புரம்: திண்டிவனம் அருகே 2 சிறுமிகளை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 15 பேருக்கு, தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

புதுச்சேரியில் உள்ள அரசுப் பள்ளியில் 2019-ம் ஆண்டில் 2-ம் வகுப்பு பயிலும் 7 வயது சிறுமி ஒருவர் மயங்கி விழுந்தார். அவரை ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதித்து பரிசோதித்தபோது, உடல் முழுவதும் காயங்கள் இருந்ததும், அந்த சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருந்ததும் தெரியவந்தது.

இது தொடர்பாக, புதுச்சேரி குழந்தைகள் நலக்கமிட்டி நடத்திய விசாரணையில், அந்த சிறுமியும், அவரின் 9 வயது மூத்த சகோதரியும் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டது கண்டறியப்பட்டது. இதையடுத்து, 9 வயதுசிறுமியும் சிகிச்சைக்காக ஜிப்மர்மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதற்கிடையே, சில நாட்களில் சிகிச்சை பலனின்றி 9 வயது சிறுமி உயிரிழந்தார்.

திண்டிவனம் அருகேயுள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த அந்த சிறுமிகள், புதுச்சேரியில் உள்ள தங்களது பாட்டியின் பராமரிப்பில் இருந்து வந்துள்ளனர். அவர்களது தந்தை 2-வது திருமணம் செய்துகொண்டுள்ளார். தொடர்ந்து, அவர்களது தாயாரும் மற்றொருவரை 2-வதாக திருமணம் செய்து கொண்டுள்ளார். இதனால், சிறுமிகள் பாட்டியின் பராமரிப்பில் இருந்துள்ளனர்.

அங்குள்ள அரசுப் பள்ளியில் சேர்க்கப்பட்ட சிறுமிகள் திண்டிவனம் பகுதியில் இருந்தபோது,உறவினர்கள் 15 பேரால் அவ்வப்போது பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகியுள்ளனர். சில நேரங்களில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததும் விசாரணையில் தெரியவந்தது.

சிறுமிகளின் பாட்டி அளித்த புகாரின் பேரில் பிரம்மதேசம் போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ்வழக்கு பதிவு செய்து, தீனதயாளன் (24), அஜித்குமார் (22), பிரபாகரன் (23), பிரசாந்த் (20), ரவிக்குமார் (23), அருண் (எ) தமிழரசன் (24), மகேஷ்(37), ரமேஷ் (30),துரை (47), மோகன் (23), செல்வம் (37), கமலக்கண்ணன் (30), முருகன் (40), துரைசாமி (55), சேகர் (எ) செல்வ சேகர் (32) ஆகியோரைக் கைது செய்தனர். இவர்கள் அனைவரும் சிறுமிகளின் உறவினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இது வழக்கின் விசாரணை விழுப்புரம் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. இதில், குற்றம் சுமத்தப்பட்ட 15 பேருக்கும் தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் தலா ரூ.32 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி வினோதா நேற்று தீர்ப்பளித்தார்.

x