மின்கம்பி திருடியதாக புகார் செய்த இளைஞர்: மது வாங்கிக் கொடுத்து போட்டுத் தள்ளிய சிறுவன்


மயிலாடுதுறை அருகே சித்தாள் வேலை பார்த்து வந்த இளைஞரை கொலை செய்த 17 வயது சிறுவன் உள்ளிட்ட இருவர் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மயிலாடுதுறை அருகே மூவலூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் ராஜலிங்கம் மகன் ராஜ்குமார் (20). இவர் சித்தாள் (கொத்தனாருக்கு உதவியாளர்) வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் பணிக்கு சென்றவர் இரவு வீடு திரும்பவில்லை. இதனால் பதட்டமடைந்த ராஜ்குமாரின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அவர் வேலைக்குச் சென்ற இடம் உள்ளிட்ட பல இடங்களிலும் அவரைத் தேடி வந்தனர்.

எங்கு தேடியும் அவர் கிடைக்காத நிலையில் நேற்று மங்கைநல்லூர் அருகே மஞ்சளாறு ரயில்வே பாலத்தில் அவரது உடல் கற்களாலும் பாட்டிலாலும் சிதைக்கப்பட்ட நிலையில் கிடந்தது. அதையடுத்து அங்கு வந்த ரயில்வே போலீஸார் ராஜ்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய மயிலாடுதுறை காவல் நிலைய போலீஸார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில் இரண்டு பேர் ராஜ்குமாருடன் செல்வது தெரிய வந்தது. அதன் அடிப்படையில் போலீஸார் மேற்கொண்ட விசாரணையில் சித்தர்காட்டை சேர்ந்த குருமூர்த்தி மகன் கபிலன் (22) மற்றும் மகாதானபுரத்தை சேர்ந்த 17 வயது சிறுவன் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

கபிலன் மற்றும் சிறுவன் ஆகியோர் மின்கம்பிகளை திருடியதாக ராஜ்குமார் பழி சுமத்தியதால் ஆத்திரமடைந்து இருவரும் அவரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர். ராஜ்குமாருக்கு மது வாங்கி கொடுத்து அவர் போதையில் இருக்கும்போது பாட்டிலால் அடித்துக் கொலை செய்தது தெரியவந்தது. விசாரணைக்கு பின் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மயிலாடுதுறையில் கட்டிடத் தொழிலாளி பாட்டிலால் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் மயிலாடுதுறை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

x